யாழிலிருந்து வந்த மரக்கறிகள்! கொழும்பு சந்தைகளில் ஏற்பட்ட மாற்றம் – ஜனாதிபதி கோட்டாயவின் உத்தரவு

அண்மைக்காலமாக அதிகரித்து காணப்பட்ட மரக்கறிகளின் விலைகள் திடீரென குறைக்கப்பட்டுள்ளன.

இதன் நன்மைகள் நாட்டு மக்களுக்கு சென்றடைகின்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நுகர்வோர் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து புறக்கோட்டை, மெனின் சந்தையின் மரக்கறி விலைகள் தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்க நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் ஷாந்த திஸாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் பெய்த அடைமழை காரணமாக மரக்கறிகளின் விலைகள் பெருமளவில் அதிகரித்து காணப்பட்டன. எனினும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதியின் பின்னர் மரக்கறி விலை மேலும் குறைவடையும் என மெனின் சந்தையின் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ். குடா நாட்டில் இருந்து மரக்கறி தொகை ஒன்று சந்தைக்கு வந்ததனை தொடர்ந்து மரக்கறி விலை குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய போஞ்சி ஒரு கிலோ கிராம் 220 ரூபாவுக்கும் கரட் ஒரு கிலோ கிராம் 300 ரூபாவுக்கும் லீக்ஸ் ஒரு கிலோ கிராம் 220 ரூபாவுக்கும் பீட்ரூட் ஒரு கிலோ கிராம் 150 ரூபாவுக்கும் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் கண்டி, தம்புள்ளை, மீகொட, நாரஹென்பிட்டி, தம்புத்தேகம மற்றும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறியின் விலை குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.