யாழ் பல்கலைக்கழக மாணவி கொலையில் திடுக்கிடும் தகவல்கள்! நொடிப் பொழுதில் தப்பிய தமிழ் சமூகம்..

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவி நேற்று கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை இளைஞர்கள் உடனடியாகவே இனங்கண்டு பின்தொடர்ந்ததால் மிகப்பெரும் அரசியல் இன மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது.

மருத்துவ பீட இறுதி வருட மாணவி ஒருவர் யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தென்னிலங்கை அரசியல்வாதிகளால் பெரும் இன மோதலாக மாற்றப்பட்டிருக்கக் கூடியது.

எனினும் மாணவியைக் கொலை செய்தது அவரது கணவரான இராணுவச் சிப்பாய் என அறியப்பட்டு அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டமை பெரும் இனமோதலைத் தவிர்த்துள்ளது.

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுலாக் கடற்கரையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட இறுதி வருட மாணவி ஒருவர் இன்று பிற்பகல் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன், அவரது சடலம் கடலுக்குள் தள்ளிவிடப்பட்டிருந்தது.

கொழும்பு பேருவளையைச் சேர்ந்த ரோசினி ஹன்சனா (வயது – 29) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.

சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியில் கூடியிருந்த உள்ளூர் இளைஞர்கள் கொலையாளியைப் பின் தொடர்ந்து சென்றதுடன், அவரை துரத்திப் பிடித்துள்ளனர்.

இளைஞர்களுக்கு அந்தப் பகுதியில் நின்ற விமானப் படையின் புலனாய்வு உத்தியோகத்தர்களும் உதவியுள்ளனர்.

இவ்வாறு பிடிக்கப்பட்டவர் கிளிநொச்சி – பரந்தன் இராணுவ முகாமில் பணியாற்றுபவர் எனக் கண்டறியப்பட்டார்.

அதுதொடர்பில் அவர் கடமையாற்றும் படை முகாமுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டால் பொலிஸ் நிலை சிறைக் கூடத்தில் அடைக்கப்படுவது வழமை என்ற போதும், இந்த கொலையின் சந்தேகநபர் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அலுவலகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், அவர் கைது செய்யப்பட்டு 4 மணிநேரங்கள் கடந்த போதும் வாக்குமூலம் பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

கொலையாளி கணவர்

கொல்லப்பட்ட மாணவிக்கும் கொலையாளிக்கும் சில வருடங்களுக்கு முன்னர் பதிவுத் திருமணம் இடம்பெற்றுள்ளது என்று ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பொலிஸார் தெரிவித்தனர்.

வேறு நபர் ஒருவருடன் சேர்ந்து மனைவி எடுத்துக் கொண்ட ஒளிப்படங்கள் சில கிடைத்தன. அவை தொடர்பில் இருவருக்கு ஏற்பட்ட முரண்பாட்டினால்தான் அவரைக் கொலை செய்தேன் என்று கொலையாளி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் கொல்லப்பட்ட மாணவி இன்னும் ஒரு மாதத்தில் இடம்பெறவிருந்த மருத்துவத்துறை இறுதிப் பரீட்சைக்கு தோற்றவிருந்தார் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவித்தன.