கூட்டமைப்பை உருவாக்குவதற்கு விடுதலைப் புலிகளின் பிரதான பங்களிப்பு இருந்தது – சீ.வி.கே.சிவஞானம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் மிக பிரதான பங்களிப்பு இருந்தது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி கெப்பிடல் தொலைக்காட்சில் ஒளிபரப்பான விடிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் உருவாக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

நேற்றையதினம் வடமாகாண சபையில் உள்ள அவைத்தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திடம் , நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட நேரத்தில் புளொட் அமைப்பு அங்கம் பெற்றிராத காரணத்தினால் சித்தார்த்தனுக்கு அந்த விடயம் தெரியாமல் இருந்திருக்கக்கூடும் எனவும் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பை விடுதலைப்புலிகள்தான் உருவாக்கினார்கள் என்பது கடந்த 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 22 ஆசனங்களை பெற்றுக்கொண்டதன் மூலம் வெளிப்பட்டதாக சீ.வி.கே.சிவஞானம் மேலும் தெரிவித்துள்ளார்.