யாழில் தங்கையை தாயாக்கிய குற்றவாளிக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த கடுமையான தண்டனை

தங்கை முறை கொண்ட பெண்ணை தகாத பாலியல் உறவால் தாயாராக்கிய குடும்பத் தலைவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்ப்பு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால் இன்று வழங்கப்பட்டுள்ளது. இதன்போது தீர்ப்பை வாசித்த நீதிபதி,

சிறிய தாயாரின் மகளான அந்தச் சிறுமி தங்கை முறை உடையவர். உறவுமுறைத் தங்கையுடன் தவறான பாலியல் உறவு வைத்தமைக்கு எதிரிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது.

எதிரி அதே குற்றத்தை மீளவும் புரிந்துள்ளதால் அதற்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது.

இரண்டு தண்டனைக் காலத்தையும் எதிரி ஏக காலத்தில் அனுபவிக்க முடியும். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் ரூபா இழப்பீட்டை எதிரி வழங்கவேண்டும்.

அதனை வழங்கத் தவறின் 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். தண்டமாக 10 ஆயிரம் ரூபா செலுத்தவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 2 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என்று தீர்ப்பளித்தார்.

பருத்தித்துறை – கற்கோவளம் பகுதியில் 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி 14 வயதுடைய சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார் என்று எதிரியின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் கருணை விண்ணப்பம் முன்வைத்தார்.

“எதிரி தனது குற்றங்களை ஏற்றுள்ளார். எனினும் உறவுமுறையான தங்கையை அவர் வன்புணர்வுக்கு உட்படுத்தியதன் ஊடாக அந்தச் சிறுமிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளார்.

எதிரி இந்தக் குற்றத்தைச் செய்யும் போது சட்டமுறைத் திருமணத்தின் ஊடாக 3 பிள்ளைகளின் தந்தையாகவும் இருந்துள்ளார்.

எதிரியின் குற்றத்துக்கு 7 ஆண்டுகள் தொடக்கம் 20 ஆண்டுகள் வரையான சிறைத் தண்டனையை வழங்க முடியும். எனவே எதிரிக்கு அதிகபட்ச தண்டையை வழங்குவதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்கவேண்டும்” என்று அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் மன்றில் விண்ணப்பம் செய்தார்.

இரண்டு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் குறித்த தண்டனைத் தீர்ப்பை வழங்கினார்.