நாளை முதல் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு ஒன்லைன் பதிவு!

வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு தேவையான வைத்திய பரிசோதனைக்கு ஒன்லைன் ஊடாக நாளை முதல் பதிவு செய்யலாம் என தெரிவிக்கபடுகின்றது.

அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இதற்கென அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தள செயலி நாளை முதல் செயற்பாட்டுக்கு வரவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் குறித்த இணையத்தள செயலி சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அது வெற்றியளித்துள்ளது.

இந் நிலையில், நாளை காலை முதல் இணையத்தளத்தினூடாக வைத்திய சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கான தினம் மற்றும் நேரத்தை பதிவுசெய்துகொள்ள முடியுமென தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இதற்கான கையடக்கத்தொலைபேசி செயலியை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான வைத்திய பரிசோதனைக்கான தினம் மற்றும் நேரத்தை பதிவுசெய்வதற்கு www.ntmi.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிக்குமாறும் பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.