காதலியை பார்க்க வெளியூரில் இருந்து வந்த இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! மோசமான சம்பவத்தின் பின்னணி

தமிழகத்தில் பெண் குரலில் பேசி, ஒருவரை மயக்கி அவரிடமிருந்து பணம், நகை உள்ளிட்டவைகளை 5 பேர் கொண்ட கும்பல் திருடிய நிலையில், தற்போது அதில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

சென்னை கொளத்தூர் சன்தானியா நகர் 2வது தெருவை சேர்ந்தவர் தருண் (17). இவர் காட்டுப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரது நண்பர் கொளத்தூர் பூம்புகார் நகர் 21-வது தெருவை சேர்ந்த ஆதி (23). காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (18), கொளத்தூர் வெற்றி நகரை சேர்ந்தவர்கள் யுவராஜ் (19), சதீஷ் (18). இவர்கள் 5 பேரும் நண்பர்கள்.

இதில், ஆதியின் தாய் மாலதி அயனாவரத்தில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில் அதிகாரியாக உள்ளார்.

இந்நிலையில், தருண் பேஸ்புக்கில் ஒரு பெண் புகைப்படத்துடன் போலி கணக்கு தொடங்கி, பலரிடம் பேசி வந்துள்ளார். அப்போது, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா புஞ்சை புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சண்முகசுந்தரம் (37) என்பவர், தருண் பெண் என கருதி பேஸ்புக்கில் பேசி வந்துள்ளார்.

அப்போது இருவரும் போன் நம்பர்களை மாற்றிக் கொள்ள, தருண் பெண் குரலில் பேசி மயக்கும் குணம் கொண்டவர் என்பதால், அவர் சண்முகசுந்தரத்திடம் பெண் குரலில் பேசியுள்ளார்.

ஒரு கட்டத்தில், தருண், சண்முக சுந்தரத்திடம், நான் உங்களை காதலிப்பதாகவும், நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து சண்முகசுந்தரம் நேற்று முன்தினம் இரவு ஈரோட்டில் இருந்து சென்னைக்கு வந்து தருணுக்கு போன் செய்துள்ளார்.

அப்போது, அவரை மாதவரம் ரவுண்டானா அருகே வரும்படி அங்கே சண்முகம் அன்றே சென்ற போது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில், தருண் தனது நண்பர்களுடன் அங்கு நின்றிருந்தார். சண்முகசுந்தரம் தருணை பார்த்து, தன்னுடன் பேசிய பெண் எங்கே என்று கேட்டுள்ளார்.

அப்போது, திடீரென தருண் மற்றும் அவரது நண்பர்கள் ஆதி, நவீன்குமார், யுவராஜ், சதீஷ் ஆகியோர் சண்முகசுந்தரத்தை தாக்கி, அவர் வைத்திருந்த செல்போன், 15 ஆயிரம், செயின், மோதிரம் மற்றும் ஏடிஎம் கார்டை பறித்தனர்.

பின்னர், தருணும், நவீன்குமாரும் சண்முகசுந்தரத்தை பிடித்துக்கொள்ள, அவரது ஏடிஎம் ரகசிய எண்ணை பெற்றுக் கொண்ட யுவராஜ், சதீஷ், ஆதி ஆகிய 3 பேரும் ரவுண்டானா அருகில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க பைக்கில் சென்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த ரோந்து வந்த பொலிசார், ஒரு வாலிபரை 2 பேர் பிடித்து வைத்திருப்பதை பார்த்து அருகில் வந்து, சண்முகசுந்தரத்திடம் விசாரித்தனர்.

அவர் நடந்த சம்பவத்தை பொலிசாரிடம் கூற, அந்த நேரத்தில், ஏடிஎம் சென்ற 3 பேரும் அங்கு திரும்பி வந்தனர். இவர்கள், பொலிசாரை பார்த்ததும் அங்கிருந்து பைக்கில் தப்பினர். இதையடுத்து சண்முகசுந்தரம், தருண், நவீன்குமார் ஆகிய 3 பேரை மாதவரம் காவல் நிலையத்திற்கு பொலிசார் அழைத்து சென்றனர்.

பொலிசாரிடம் சிக்காமல் தப்பிய யுவராஜ், சதீஷ், ஆதி ஆகிய 3 பேரும் இரவு முழுவதும் பைக்கில் பல்வேறு பகுதிகளில் சுற்றியுள்ளனர்.

இவர்கள், நேற்று அதிகாலை கிழக்கு கடற்கரை சாலையில் பனையூர் சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

இதில், யுவராஜ், சதீஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஆதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனாலும், அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். இதுகுறித்து மாதவரம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து தருண், நவீன்குமார் ஆகிய 2 பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார். தப்பியோடிய ஆதியை தேடி வருகின்றனர்.