நெடுந்தீவில் ஈபிடிபிக்கு ஆப்பு! கூட்டமைப்பின் நகர்த்தல்

ஈ.பி.டி.பி. கூடிய ஆசனங்களைப்பெற்ற நெடுந்தீவு பிரதேச சபையில் ஆட்சியமைக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேச சபையில் போட்டியிட்ட சுயேச்சைக் குழுவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இரு சுற்றுப்பேச்சுகள் இதுவரையில் நடத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நெடுந்தீவு பிரதேச சபையில் ஈ.பி.டி.பி. 6 ஆசனங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களையும், சுயேச்சைக் குழு 2 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தது.

நெடுந்தீவு மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபைகளில் தாம் ஆட்சியமைக்கப்போகின்றோம் என்று ஈ.பி.டி.பி. அறிவித்திருந்தது.

இந்நிலையில், நெடுந்தீவில் போட்டியிட்ட சுயேச்சைக் குழுவுடன் இணைந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் செயலர்சிறிகாந்தா, அந்தக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், விந்தன் ஆகியோருடன் சுயேச்சைக் குழு முதல் கட்டமாகப் பேச்சு நடத்தியுள்ளது.

நான்கு ஆண்டுகள் தவிசாளர் பதவிக்காலத்தின் முதல் இரண்டு ஆண்டுகளையும் தமக்குத்தரவேண்டும் என்று சுயேச்சைக் குழு கோரியுள்ளது. அதற்கு இணக்கம் தெரிவிக்கப்படவில்லை.

பின்னர், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜாவுடன் சுயேச்சைக் குழு மீண்டும் சந்திப்பு நடத்தியுள்ளது. அதில் இறுதி முடிவெடுக்கப்படவில்லை.

அதேவேளை, ஈ.பி.டி.பிக்கு ஆதரவு வழங்குவதில்லை என்று சுயேச்சைக் குழு திட்டவட்டமாகத் தீர்மானித்துள்ளது என்று தெரியவருகின்றது.