படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலை மருத்துவ பீட மாணவி! கண்ணை மறைத்த அவசரம்!

பேருவளையை சேர்ந்தவர் திலீப் குமார. அப்பகுதியில் உள்ள ஒரு பாடசாலையொன்றில் கல்வி பயின்ற மிக அப்பாவி இளைஞன்.

தீவிர மதப்பற்றுடைய மாணவன். பாடசாலை நாட்களில் மிகக் குறைவான நண்பர்களையுடைய ஒருவர்.

அந்த மாணவன்தான், வளர்ந்து, காதல் ஒருவித வெறியாகி, பண்ணை கடற்கரையில் தனது மனைவியை கழுத்தறுத்து கொன்ற கொடூர கொலைகாரனாகியுள்ளார்.

கொல்லப்பட்ட மாணவி ரோஷனி காஞ்சனா, பேருவளையின் பந்தனகொடவில் வசிப்பவர். திலீப் படித்த அதே பாடசாலையில் கல்வி பயின்றவர்.

ஏழைக் குடும்பத்தை சேர்ந்த மாணவி. எனினும், கல்வியில் சிறப்பானவர். அதனால் வகுப்பில் அவர் மீது ஆசிரியர்கள் அக்கறையுடன் இருந்தனர்.

பாடசாலை காலத்தில் அழகான மாணவிக்கு வரும் எல்லா தொல்லையும் காஞ்சனாவிற்கும் வந்தது. ஆனாலும், அவர் அமைதியான மாணவியாக இருந்தார். அவளது இதயத்தை வெல்லும் இராஜகுமாரன் எவரும் அவரை அணுகவில்லை.

இதேவேளை, திலீப் சில காலமாக ஒரு தலையாக அவரை காதலித்து வந்திருக்கிறார். அதாவது திரும்பும் திசையெல்லாம் காஞ்சனாதான் அவருக்கு தெரிந்தார்.

நீண்டநாட்களாக மனதை மூடி வைத்திருந்த திலீப், ஒரு கட்டத்தில் தனது காதலை காஞ்சனாவிடம் சொன்னார்.

அது காஞ்னாவை ஆச்சரியப்படுத்தியது. திலீப் அப்படி ஒரு விஷயத்தைக் கேட்பார் என்று அவள் நினைத்ததில்லை. ஏனெனில் திலீப் மிகவும் அப்பாவி.

அப்பாவி என்றாலும், திலீப் ஒரு குணவான். அதனால் காஞசனாவின் இதயம் அவனிடம் ஈர்க்கப்பட்டது. காலப்போக்கில் அவள் திலீப்புக்கு தகவல் கொடுத்தாள்.

அதைக் கேட்டதும், அவர் தான் உலகின் அதிர்ஷ்டசாலி என்று நினைத்தார்.

திலீப்- காஞ்சனா காதல் பாடசாலையில் தொடங்கியது. ஆனால், அது யாருக்கும் தெரியாது. இரகசியமாக நேசித்தனர். பாடசாலை காலம் முடியும் வரை அது இரகசியமாகவே இருந்தது.

காஞ்சனா இரண்டு முறை உயர்தர பரீட்சை எழுதியும் பல்கலைகழக அனுமதி கிடைக்கவில்லை. மருத்துவராக வேண்டுமென்பது அவரது சிறு வயது குறிக்கோள். மூன்றாவது முறை தோற்றி, யாழ் பல்கலைகழகத்தில் மருத்துவபீட அனுமதி பெற்றார்.

இதேவேளை, திலீப் இலங்கை இராணுவத்தின் மருத்துவ பிரிவில் சேர முயன்றார். எனினும், அதற்கு தகுதி பெறவில்லை. ஒரு சாதாரண சிப்பாயாகவே அவர் இணைக்கப்பட்டார்.

பல்கலைகழக அனுமதி கிடைத்த பின்னர் தனது வீட்டில் காதல் பற்றி காஞ்சனா தெரிவித்தார். திலீப்பும் தனது வீட்டில் சொன்னார்.

இரண்டு வீட்டிலும் அவ்வளவு விருப்பமிருக்கவில்லை. ஆனாலும், அவர்களின் விடாப்பிடியால் சம்மதித்தனர். இதையடுத்து, 2016ம் ஆண்டு இருவருக்கும் பதிவுத் திருமணம் நடந்தது.

திருமணத்திற்குப் பிறகு திலீப்பின் வீட்டிற்கு காஞ்சனா குடிபெயர்ந்தார். காஞ்சனாவின் விடுமுறையின் போதும், திலீப்பின் விடுமுறையின் போதும், வீட்டில் சந்தித்தனர். அந்த நேரத்தில் அவர்களிற்குள் பல்வேறு காரணங்களுக்காக சண்டைகள் ஏற்பட்டன.

.குறிப்பாக திலீப்பின் மனதில், காஞ்சனா குறித்த சந்தேகம் ஏற்பட்டிருந்தது. அவர் வேறொருவருடன் காதல் உறவில் இருப்பதாக திலீப் கருதினார். ஆனால், அதை சொல்ல இப்போது காஞ்சனா இல்லை. அவர்களிற்கு மட்டுமே தெரிந்த இரகசியமாக அது முடிந்து போகிறது.

எனினும், இருவருக்கிடையிலும் தீவிரமாக பிரச்சனை இருந்து வந்தது உறுதியாகிறது.

இருவருக்குமிடையிலான மோதல் முற்றியதும், காஞ்சனா உறுதியான முடிவெடுத்து திலீப்பின் வீட்டிலிருந்து வெளியேறி தனது வீட்டிற்கு சென்று விட்டார். அதன் பின்னர் இருவரதும் சந்திப்புக்கள் குறைந்தன.

தனது வீட்டிற்கு சென்றதும், திலீப்புடன் வாழ முடியாது, விவாகரத்து செய்யப் போவதாக காஞ்சனா தெரிவித்தார். திலீப்பை விட்டு விலகுவதில் காஞ்சனா உறுதியாக இருந்தார்.

எனினும், விவாகரத்து செய்ய திலீப் மறுத்துவிட்டார். காஞ்சனாவுடன் குடும்ப வாழ்க்கை வாழ விரும்பினார். ஆனால் காஞ்சனாவுக்கு அது பிடிக்கவில்லை.

அவர் விவாகரத்தை விரும்பினார். விவாகரத்து கோரினார்.

திலீப் தயக்கினார்.

விவாகரத்து பற்றி திலீப் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

திலீப்பால், காஞ்சனாவை மறக்க முடியவில்லை. காஞசனாவை பற்றி நிறைய யோசித்தார். இறுதியாக ஒரு கடினமான முடிவை எடுத்தார். அவர் யாரிடமும் சொல்லாமல் அதை இதயத்தில் வைத்திருந்தார்.

பின்னர் அவர் தனது மனைவி ரோஷானிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்து, சந்திக்க விரும்புவதாக கூறினார்.

ஆனால் காஞ்சனா மறுத்து விட்டார். எனினும், திலீப்பின் வலியுறுத்தலால், இறுதியில் சந்திக்க ஒப்புக் கொண்டார்.

கடந்த 22ம் திகதி இருவரும் சந்தித்தனர்.

சந்திப்பில், காஞ்சனா தன்னுடன் வாழப் போவதில்லை என்பதை திலீப் உணர்ந்தார். இருவரும் என்ன பேசிக் கொண்டிருந்தார்கள் என்பது வெளியில் தெரியாது.

ஆனால், இருவரும் தர்க்கப்பட்டதை அங்கிருந்த பலரும் பார்த்தனர். பலர் தம்மை அவதானிப்பதையடுத்து, இருவரும் தள்ளிதள்ளி ஒதுக்குப்புறமாக சென்றனர்.

இதற்கிடையில், அங்கிருந்த தள்ளுவண்டிலில் இரண்டு முறை வடை வாங்கி சாப்பிட்டனர்.

அந்த பகுதியில் காதலர்கள் கூடுவதும், அவர்களிற்குள் ஊடல் ஏற்பட்டு தர்க்கப்படுவதும் சகஜமென்பதால், அந்தப்பகுதியில் நின்றவர்கள் அந்த ஜோடியின் சச்சரவை பெரிதாக எடுக்கவில்லை.

இறுதியில், பெண்ணொருவரின் அலறல் சத்தம் கேட்டபோதுதான், ஏதோ விபரீதம் நேர்ந்ததை அந்த பகுதியில் நின்றவர்கள் உணர்ந்தனர்.

பாடசாலைக்காலத்தில் இருந்து ஒருவரையொருவர் அறிந்திருந்த இளம் ஜோடியின் வாழ்க்கை திசைமாறி இன்று ஊடகங்களினதும், மக்களினதும் செய்தியாகி விட்டனர். பல கனவுகளுடன் இருந்த காஞ்சனா இன்று உயிருடன் இல்லை.

அவரை கொன்ற திலீப் இப்போது சிறைக்குள். ஆத்திரமும், அவசரமும் கண்ணை மறைக்க, அவர் எடுத்த முடிவு, இனி ஒவ்வொரு நொடியும் அவரை கொன்று கொண்டிருக்கும்.