போராளிகளின் இன்றைய நிலை? பார்வை இழந்த முன்னாள் போராளி உருக்கம் (படங்கள்)

விடுதலைப் போராட்டத்தில் இருந்த போது நாங்கள் ராஜாக்கள் போன்று சமூகத்தால் வரவேற்கப்பட்டோம் இப்போது அனாதைகளாக பார்க்கப்படுகின்றோம்.

ஆனால் அதே சமூகத்தில் நல்லவர்களும் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்து வருக்கின்றோம் என பார்வை இழந்த முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – வவுணதீவுப் பிரதேசத்திலுள்ள தாண்டியடி எனும் கிராமத்தில் வசித்து வரும் த.விஜயகுமார் ஒரு முன்னாள் போராளி.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் சாதாரண குடிமகனாக வாழ்ந்து கொண்டிருந்த வேளை இவரது கண் பார்வை மங்கத் தொடங்கியிருந்தது.

இதனால் அரச வைத்தியசாலை ஒன்றில் இவரது கண்களுக்கான சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவரது இரு கண்களும் முற்றாக பார்வையை இழந்துள்ளன.

இப்போது இவர் கண்பார்வை அற்ற ஒருவர். அதேநேரம் பிறப்பால் கண்பார்வையில்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

வருகின்ற மாதங்களில் இவரது மனைவிக்கு முதலாவது குழந்தை கிடைக்க இருக்கின்றது.

இந்த நிலையில் சொந்தத்தில் வீடு கூட இல்லாத நிலையில் உறவினர்களின் வீடுகளில் மாறிமாறி காலத்தைக் கழித்து வரும் இவரது குடும்பத்திற்கென பிரதேசசெயலகம் தாண்டியடி எனும் கிராமத்தில் ஒரு துண்டுக் காணியை வழங்கியுள்ளது.

வாழ்வகம் என்கின்ற விஷேட தேவையுடையோருக்காக பணியாற்றி வருகின்ற அமைப்பு இவரது குடும்பத்திற்காக ஒரு தற்காலிக கொட்டிலை அமைத்துக் கொடுத்திருக்கின்றது.

எதிர் காலத்தில் அந்த கொட்டிலின் ஒரு பகுதியில் சிறுகடை வியாபாரம் செய்யக்கூடிய அமைப்பில் அக்கொட்டில் அமைக்கப்பட்டிருக்கின்றது. முற்றாக கண் பார்வையற்ற கணவனும் மனைவியும் எப்படி வியாபாரம் செய்யப் போகிறார்கள் என்பது கேள்விக்குரியதே?

விஜயகுமார் தனக்கு கிடைத்துள்ள காணியினுள் மலசலக்கூடம் ஒன்றினை அமைத்துத் தருமாறு மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் அஹிம்சா எனும் சமூக நிறுவனத்தைக் கேட்டிருந்தார்.

இந்த நிலையில், அஹிம்சா சமூக நிறுவனமும், அவருக்காக உதவிக் கொண்டிருக்கும் வாழ்வக நிர்வாகிகளும் நீர் இணைப்பினை பெற்றுக் கொள்வதற்கு தேவையான நிதி வசதியை இன்று வழங்கிவைத்துள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் போராளி,

உதவுவோர் யாரும் அற்ற நிலையில் பார்வையில்லாத நானும் எனது மனைவியும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த போது வாழ்வகம் அமைப்பினர் எங்களை காப்பாற்றினர்.

விடுதலைப் போராட்டத்தில் இருந்த போது நாங்கள் ராஜாக்கள் போன்று சமூகத்தால் வரவேற்கப்பட்டோம். இப்போது அனாதைகளாக பார்க்கப்படுகின்றோம்.

எல்லா உடல் அம்சங்களும் பூரணமாக இருப்பவர்கள்கூட வாழ முடியாமல் தவிக்கின்ற இந்த உலகத்தில் கண் பார்வையை இழந்துபோன எங்கள் வாழ்வு எப்படியிருக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like