வடக்கின் வெற்றிடங்களிற்கு வெளிநாட்டவர்களை உள்ளீர்க்கவேண்டிய அபாயம்! ஆளுநர் அறிவிப்பு

வடமாகாணத்தில் விஞ்ஞானம், கணிதம் ஆகிய இரண்டு துறைகளும் மிகவும் சவாலுக்குரியதாக மாறியுள்ளதாகவும், அரச திணைக்களங்களில் போதியளவு வைத்தியர்கள், தாதியர்கள், பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் காணப்படவில்லை, விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்று வெளியேறுகின்ற மாணவர்களின் தொகை மிகவும் குறைவாக காணப்படுவதால் ஆட்சேர்ப்பு என்பது மிகவும் சவாலுக்குரியதொன்றாகவுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ். எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் , வடமாகாணம் தழுவிய ரீதியில் மாணவர்கள் மத்தியில் 2019 ஆம் ஆண்டில் நடாத்திய விஞ்ஞானம், கணிதபாட போட்டிப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் வடமாகாணத்தில் 221 வைத்தியர்கள் மற்றும் 200 இற்கும் மேற்பட்ட தாதியர்களின் வெற்றிடம் நிரப்பப்படாமலுள்ளதாக குறிப்பிட்ட ஆளுநர், இவ்வாறான சூழ்நிலையில் தேவையற்ற துறைகளில் மாணவர்களைப் பயிற்றுவித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வெளிமாகாணங்களில் உள்ளீர்க்கப்பட்ட ஆசிரியர்கள் வடமாகாணத்திற்கு வருகை தருவதற்கு ஆர்வம் செலுத்துகிறார்கள் என்றும், எனவே, தேவையான பாடங்களைத் தேர்ந்தெடுத்து மாணவர்கள் பயின்று கொண்டால் நிச்சயமாக சிறந்த வேலைவாய்ப்புத் தேடி வரும் எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

வடமாகாண மாணவர்கள் விஞ்ஞானம், கணிதம் ஆகிய இரண்டு பாடங்களிலும் சிறுவயது முதல் மிகவும் கவனமெடுத்துக் கற்க வேண்டும் என்றும், இல்லையெனில் வட மாகாணத்திற்கு வைத்தியர்கள், தாதியர்கள் போன்ற துறைகளில் ஆளணியினரை நிரப்புவதற்கு வெளிநாட்டவர்களை உள்ளீர்க்க வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந் நிகழ்வில் வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.