உலகின் ஐந்தாவது மிகபெரிய சொகுசு பயணக் கப்பலில் கொரோனா வைரஸ்? ஆபத்தின் விளிம்பில் 7000 பேர்!

உலகை பாரிய அச்சுறுத்தலில் வைத்திருக்கும் கொடிய கொரோனா வைரஸ் உலகின் ஐந்தாவது பெரிய சொகுசு பயணக் கப்பலில் நுழைந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் 7000 பேர் ஆபத்தில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கப்பலில் பயணித்த சீன தம்பதியரில், அந்த பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அது கொரோனா வைரஸாக இருக்குமா என்பதை அறிவதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அந்த ஆய்வுகளின் முடிவுகள் வரும்வரையில் கப்பலிலுள்ள பயணிகள் அனைவரும் கப்பலிலேயே தங்கியிருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கோஸ்டா ஸ்மரால்டா என்ற சொகுசு பயணக் கப்பல் ரோம் நகரின் சிவிடவேச்சியாவின் கரையோரத்தில் நங்கூரமிட்டதாக கூறப்படுகிறது.

ரோமில் உள்ள ஸ்பல்லன்சானி மருத்துவமனையைச் சேர்ந்த நிபுணர்கள் குழு சீன தம்பதியினரின் இரத்த பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் தற்போது கப்பலின் மருத்துவ பிரிவில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த கப்பலில் 6,000 பயணிகளும், 1,000 பணியாளர்களும் உள்ளனர். அந்த சீனப் பெண்ணின் ஆய்வக முடிவுகள் வந்தபின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.

இதனால், அந்த கப்பலிலிருக்கும் மற்ற பயணிகள் அடுத்து என்ன நடக்குமோ என்ற கலக்கத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.