என்னை அம்மாவிடம் அழைத்து செல்லுங்கள்! கதறும் பட்டம் பெற்ற பாடகியின் கண்ணீர் கதை…

இது வரை காலம் நான் அங்கு சென்றதில்லை… முதல் தடவையாக காண்கின்றேன்… பாரிய நிலப்பரப்பு… பழைய கட்டிடங்கள்…. அதனை சுற்றி இடைவெளியற்ற மதில் சுவர்… அங்கொடையில் அமைந்துள்ள தேசிய மனநல மருத்துவமனைதான் அது..!

நான்கு பாடல்களை பாடிய கலைத்துறையில் பட்டம் பெற்ற நன்கு சித்திரம் வரைய கூடிய மழலையின் குணம் படைத்த 41 வயதுடைய அந்தப்பெண் யார்…. அவரின் பின்னணி என்ன? அவரை நாங்கள் சகானா என்று புனைப்பெயருடன் அறிந்துக்கொள்வோம்.

நான் சென்ற வாகனம் அங்கொடை தேசிய மனநல மருத்துவமனைக்கு அருகில் நிறுத்தப்படுகின்றது.

நான் வைத்தியசாலைக்குள் பிரவேசிக்கின்றேன். வைத்தியசாலையின் பணிப்பாளரை சந்தித்து சகானாவின் சாகசங்களை அடையாளங்களாக கூறி வினவினேன்.

உடனே பணிப்பாளர் பிரிதொரு மருத்துவரை அழைத்து எனக்கு உதவிபுரியுமாறு பணித்தார்.

வைத்தியர் அழைத்து சென்றப்படியே என்னுடைய முழுவிபரங்களையும் அறிந்துக்கொண்டு குறிப்பெடுத்துக்கொண்டார்.

மிஸ்ட்டர் நாங்கள் நோயாளர்களின் தகவல்களை எவருக்கும் வழங்குவதில்லை. சமூகநலன் அடிப்படையில் கேட்பதாலும் சமூகத்திற்கு ஒரு நற்தகவலாக சென்றடையும் என்ற நம்பிக்கையில் தான் உங்களை அழைத்து செல்கின்றேன். என அந்த வைத்தியர் சற்று கனத்த குரலில் அறிவிக்கும் தொனியில் பணித்தார்.

மிகவும் புராதன காலத்தில் செதுக்கப்பட்ட கலை சித்திரங்களுடனாக ஒரு கதவு வைத்தியரை கண்டதும் மெதுவாக திறந்து விடப்பட்டது.

திடீரென வருகை தந்த ஒரு யுவதி… ‘இவர்கள் அந்த விடயமாக தானே வந்துள்ளார்கள். அனைத்தையும் பார்த்தீர்களா….?

வேறொன்றும் இல்லையே….?’ ‘இல்லை இல்லை இவர்களை நாங்கள் பரிசீலித்து விட்டோம் எந்த பிரச்சினையும் இல்லை…’ பொறுப்புடன் பதிலளித்தார் வைத்தியர்….! நோயாளர் தங்குமறைக்கு பொறுப்பானவர் என்று நினைத்திருந்தேன்… ஆனால் அவரும் நோயாளி என்பது பின்னரே தெரியவந்தது.

பொறுமையை கற்றுக்கொள்ள வேண்டுமா… பொறுமையின் அங்கமாக செயற்படும் அங்கொடை வைத்தியசாலை வைத்தியர்கள் தாதியர்களை சரணடையுங்கள். உவமிக்க உச்சமின்றி கூறுகின்றேன். அவர்கள் பொறுமையின் சிகரம்தான்….!

‘சேர் எனக்கு ஒரு உதவி புரிய இயலுமா’ நோயாளர் சிகிச்சை பெறும் பிரத்தியேக அறைக்கு சென்றவுடன் ஒரு கோரிக்கை இவ்வாறு காதில் விழுந்தது.

‘என்னை அழைத்து செல்வதற்காகத்தானே வருகைத் தந்தீர்கள், என்னுடைய அம்மாவிடம் என்னை அழைத்து செல்ல முடியுமா,? நான் என்னுடைய வீட்டிற்கு செல்ல முடியுமா, இது என்னுடைய அம்மாவின் தொலைபேசி இலக்கம், அவருக்கு அழைத்து நன்றாக இருக்கின்றாரா என்று கேட்க முடியுமா, என்னுடைய வீட்டை வயோதிபர்கள் இல்லத்திற்கு கொடுத்து விட்டு நானும் அம்மாவும் அங்கு இருக்கலாம் என நினைக்கின்றேன். அம்மா மரணித்துவிட்டால் என்னை பார்த்துக்கொள்ள எவரும் இல்லைதானே, நானும் அம்மாவும் வீட்டிற்கு சென்று அந்த வீட்டை பராமரிக்க முடியாது அல்லவா’

நான் தேடிச்சென்ற சகானாதான் என்னிடம் இந்த கோரிக்கைகளை முன்வைத்தார். அவருக்கு எதிரே அமர்ந்த நான் அவரை சில நொடிகள் பார்த்தவாறு சிந்தித்திருந்தேன்.

மனிதனின் வாழ்வில் இவ்வாறான அங்கங்களும் காணப்படுகின்றன. சகானாவின் உதடுகள் நடுங்கியவாறு ஏதோ கதைக்க முயற்சிக்கின்றாள் என்பதனை நான் உணர்ந்துகொண்டேன். கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தாள் அவளின் ஆரம்ப காலத்தை….!

‘என் வீட்டில் நானும் எனது அம்மாவும் மாத்திரமே வசிக்கின்றோம். அம்மாவிற்கு வயதாகிவிட்டது. 72 வயதாகின்றது அவருக்கு. எனக்கும் தனியாக அவரை பார்த்துக்கொள்ள முடியாது.

வீட்டினை தனியாக பராமரிக்க முடியாது. ஒவ்வொரு மாதமும் அம்மாவின் ஓய்வூதியம் கிடைக்கின்றது. நானும் அம்மாவும் அதனை பெற்றுக்கொள்ள செல்வோம். என்னுடைய அம்மா எந்தவித பிழையும் செய்யவில்லை.

என்னுடைய அம்மா என்மீது அதிகம் அன்பு கொண்டவர். என்னை பிரிந்து அம்மாவோ அவரை பிரிந்து நானோ வாழ முடியாது, ஐயோ என்னை என்னுடைய அம்மாவிடம் அழைத்து செல்லுங்கள்’

அவர் கூறும்வற்றை அருகில் ஒருவர் கேட்டுக்கொண்டிருந்தால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூற இயலாது. அந்த அளவிற்கு அவர் பொறுப்புடனும் அக்கறையுடனும் என்னுடைய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

‘நாங்கள் சீக்கிரம் அம்மாவிடம் போகலாம் நான் அழைத்து செல்கின்றேன்’ என தெரிவித்து விட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தேன்.

நான் கதைப்பதற்கு முன்னதாக முந்திக்கொண்ட சகானா மேலும் சில தகவல்களையும் வழங்கினார்.

‘எனது அம்மா ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் உணவு உட்கொள்ளும் போது தொண்டையில் இறுகிக்கொண்டதாகவும் அதற்கான சிகிச்சைக்காகவே ஹோமாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் சாமினி மிஸ் என்னிடம் கூறினார். நான் எனது அம்மாவை பாரக்க வேண்டும், அவரை பார்ப்பதற்கு அழைத்து செல்வதாக தெரிவித்தே என்னை இந்த வைத்தியசாலைக்கு அழைத்து வந்துவிட்டார்கள்.

எனது அம்மா இந்த வைத்தியசாலையில் இல்லை என நான் கூறியும் என்னை இங்கு அழைத்து வந்து விட்டனர்.’

கண்ணீர் நிலத்தை நனைக்க, வரண்டு போன உதடுகள் நடுங்க அவர் இந்த வார்த்கைகளுக்காக வாய்திறந்தார் சில நிமிடங்கள்.

‘சகானா நீங்கள் இந்த வைத்தியசாலைக்கு எப்பொழுது வந்தீர்கள். நினைவிருக்கின்றதா…? ‘

‘நான் இங்கு அனுமதிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு அதிகமாகின்றன. சிறிது காலம் வைத்தியசாலையிலும் சிறிது காலம் வீட்டிலுமாக எனது வாழ்க்கை கடந்து செல்கின்றது. நானும் அம்மாவும் வாடகை வீடொன்றில் வசித்து வந்தோம். எங்களுக்கு எம்புல்தெனியவில் சொந்த இடமொன்று இருந்தது.

அதனை 18 லட்சத்துக்கு விற்றுத்தான் நாங்கள் கொழும்பிற்கு வருகை தந்து வசித்து வந்தோம். 1994 ஆம் ஆண்டு கொழும்பிற்கு வந்தோம். நான் பாடசாலைக்கு சென்றேன்.

அம்மா வேலைக்கு சென்றார். அம்மா அரச தொழில் ஒன்றினை செய்து வந்தார். நாங்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தோம்.

எங்களுக்கு நாங்கள் மாத்திரமே, அப்பா மதுபானம் அருந்துவார். உறவினர்கள் என்றும் எவரும் இல்லை.

அப்பா மது அருந்தவதால் எனக்கு 3 மாதமாகும் சந்தர்ப்பத்திலேயே அம்மா அவரை விட்டு பிரிந்து விட்டதாக தெரிவித்தார்.

அதன் பிறகு அம்மாவிற்கு நான் மாத்திரம் என்பதனால் என்னை அன்புடன் கவனித்துக்கொண்டார். சில காலங்கள் இவ்வாறு கடந்து போன நானும் அம்மாவும் வீட்டில் சத்தமிடுகின்றோம் என தெரிவித்து அயல் வீட்டுக்காரர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஒருநாள் காவல் துறையினர் வீட்டு மதிலையும் உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் பிரவேசித்தனர். ‘வாகனயட்ட நெகப்பங்’ என சிங்களத்தில் அச்சுறுத்தினர். நானும் அம்மாவும் வானத்திற்குள் ஏறினோம். சில கெட்டவார்த்தைகளினாலும் திட்டினர். பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சிறையில் போட்டு விட்டனர்.

சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் அம்மா விடுதலையானார். பின்னர் என்னை வழக்கு விசாரணைகளுக்கு என வெளியில் எடுத்தனர்.

பின்னர் வீட்டில் நிம்மதியாக வாழ முடியும் என்ற நம்பிக்கையுடன் வெளியில் வந்தேன். ஆனால் எனது வீட்டில் வாடகைக்கு இருந்தவர்கள் என்னையும் எனது அம்மாவையும் தகாத வார்த்தைகளால் திட்டுவார்கள்.

அவர்கள் எங்களுக்கு வீட்டிற்கான வாடகையினை தருவதில்லை. அவர்களே என்னை இந்த மருத்துவ மனைக்கு அழைத்து வந்தனர்.’

‘நான் திருமணம் முடிக்கவும் இல்லை. எனக்கு ஆண்கள் மீது அவ்வளவு ஈர்ப்பு இருக்கவில்லை. பொதுவாக திருமண வாழ்க்கையில் ஆர்வம் இருக்கவில்லை என்பதே ஆகும். நான் பாடல்கள் உருவாக்கியதாக தெரிவிக்கின்றனர்;. ஆனால் எனக்கு நினைவில்லை.’

நீங்கள் உருவாக்கியதாக கூறப்படும் பாடல்களில் ஓரிரு வரிகளை சொல்லுங்களேன் ?

சரளமாக நான்கு பாடல்களினதும் முதல் வரிகளை கூரியதோடு திடீரென ஸ்ருதி சுத்தத்துடன் பாடியும் காணப்பித்தமை எமக்கு வியப்பினை ஏற்படுத்தியது.

சகானா தெரிவித்த அனைத்து கருத்துக்களும் உண்மையானவையா என தெரிந்துக்கொள்ள அவருக்கும் சிகிச்சையளிக்கும் வைத்தியரிடம் சில தகவல்களை பெற்றுக்கொள்ள தீர்மானித்தேன்.

சகானா, மிகவும் அமைதியானவர். இங்கு சிகிச்சை பெறுபவர்களில் மிகவும் புத்தி சாதூர்யமானவர். சகானா தனது தந்தையை பிரிந்து தாயிடமே வாழ்ந்து வந்துள்ளார். அவர் ஹொரண ஸ்ரீபாலி சங்கீத கல்லூரியில் கற்று பட்டம் பெற்றவர். அவர் பாடல்கள் நான்கினை பாடியுள்ளார்.

அவ்வப்போது வைத்தியர்களுக்கும் அவர் பாடிக்காட்டுவார். அம்மாவுடன் வசித்து வந்த சகானா தனது 22 ஆவது வயதில் ஒருவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

அவர் நன்கு கற்றவர் என்ற நம்பிக்கையில் சகானா அவரை மணம் முடித்துள்ளார்.

ஆனால் அவர் பேருந்து செலுத்தும் சாரதி என்பது பின்னரே தெரியவந்துள்ளது. தந்தையின் அரவணைப்பினை இழந்த சகானாவிற்கு தனது திருமண வாழ்வு தந்த ஏமாற்றம் பெரும் தாக்கத்தினை அளித்துள்ளது. திருமணம் முடித்து சில வாரங்களே வாழ்ந்துள்ளனர். அவர் சகானாவை ஏமாற்றிவிட்டு சென்றுள்ளார்.

சகானாவிற்கு இந்த ஏமாற்றங்கள் அனைத்தும் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த தனக்குத்தானே வினாக்களை தொடுத்து பதில்களையும் அளித்துக்கொண்டுள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் வசித்த வீடு பராமரிப்பின்றி மிகவும் குப்பையாக காணப்பட்டது அதிலிருந்து சகானாவை மீட்க மிகவும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

காலப்போக்கில் சகானாவிற்கு இது மனநோயினை பரிசாக அளித்துள்ளது. சகானாவிற்கு பரம்பரை நோய் என்று குறிப்பிட இயலாது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளமையானது சமூகம் அளித்த நோய் என்றே கூறவேண்டும். ஏமாற்ற நினைப்பவர்கள் ஏமாற்றமடைபவர்களின் வாழ்வில் இவ்வாறான சிக்கல்கள் காணப்படுகின்றது என்பதனையும் உணர வேண்டும்.

சமூகத்தில் உள்ள ஒவ்வொரு நபரின் மீதும் நாம் அக்கறை கொண்டவர்களாக காணப்படுதல் அவசியமாகும். எவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.

ஆனால் அவர்களை நிர்கதிக்கு ஆளாக்க வேண்டாம் என்பதே எமது கோரிக்கையாகும். மனிதர்களே மனநல வைத்தியசாலைக்கு வாருங்கள் மனிதத்தை படியுங்கள் என வைத்தியர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

இறுதியாக சகானாவின் முகத்தை உற்றுநோக்க என்னால் முடியவில்லை. நான் சகானாவை அவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல போகின்றேன் என அவர் நம்பிக்கொண்டிருக்கின்றார். அவரின் சொந்தமாகமே என்னையும் நோக்குகின்றார்.

என்ன செய்வது… சகானாவிற்கு சீக்கிரம் குணமடையவேண்டும் என பிராரத்தித்துக்கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தேன்…

மனநல வைத்தியசாலை மாத்திரமின்றி பல இடங்களில் மனிதர்களால் மனிதர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தினால் வாடும் பலர் தொடர்பில் தொடர்ந்தும் வெளிக்கொணர காத்திருக்கின்றேன்.

லெனின்