17 பேரை சுட்டுக் கொன்ற கொலையாளி தொடர்பில் வெளியான பின்னணி தகவல்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 17 மாணவர்களை சுட்டுக்கொன்ற குற்றவாளி தேசியவாதக் குழு உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

புளோரிடா குடியரசு எனப்படும் அந்த குழு மிகவும் தீவிரமாக உறுப்பினர்களை சேர்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புளோரிடா மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் புகுந்து முன்னாள் மாணவர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

சுமார் 50 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து மாயமான குறித்த இளைஞரை பொலிசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவனின் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

19 வயதேயான நிகோலஸ் குரூஸ் புளோரிடா குடியரசு எனப்படும் தேசியவாதக் குழுவில் உறுப்பினராக உள்ளார் என தெரிய வந்துள்ளது.

குறித்த குழுவானது அடுத்த 2 ஆண்டுகளில் அமெரிக்காவில் உள்நாட்டு கலவரம் வெடிக்கும் வாய்ப்புகள் மிக அதிகம் எனவும்,

மக்கள் கத்தியால் தாக்குண்டும், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும் சாவார்கள் என முன்னறிவிப்பு மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே குறித்த குழு மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், தற்போது கண்காணிப்பில் உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

இது மட்டுமின்றி கொலைகாரன் நிகோலாஸ் ஆயுதங்கள் குறித்து எப்போதும் பெருமையாக பேசும் நபர் எனவும், அவரது சமூக ஊடக பக்கத்தில் தனது துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களின் புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி நிகோலஸின் முன்னாள் காதலியின் புதிய ஆண் நண்பருடன் ஏற்பட்ட சண்டை காரணமாகவே அவரை பாடசாலையில் இருந்து நிர்வாகம் நீக்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தால் ஆத்திரம் அடைந்ததாலையே நிகோலாஸ் முகமூடி அணிந்து துப்பாக்கியுடன் புகுந்து இந்த கொலைவெறி தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.