தேசிய கீதம் தமிழிலும் பாடப்படும்

எதிர்வரும் 4 ஆம் திகதி 72 வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதத்தை பாட அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

இதனடிப்படையில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் போன்று இம்முறையும் சுதந்திர தின நிகழ்வு நிறைவடையும் போது தேசிய கீதத்தை தமிழ் பாட அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இம்முறை தேசிய தினத்தில் தேசிய கீதத்தை தமிழில் பாட இடமளிக்க வேண்டாம் என உதய கம்மன்பில உட்பட அரசாங்கத்தில் இருக்கும் கடும் இனவாதிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கடும் அழுத்தம் கொடுத்துள்ளனர். அத்துடன் தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரமே பாடப்பட வேண்டும் என இவர்கள் ஊடகங்கள் மூலம் கூறி வந்தனர்.

உலகில் எந்த நாட்டிலும் இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை என்பது இவர்களது வாதம். எனினும் உலக இரண்டு மொழிகளில் தேசிய கீதங்கள் பாடப்படும் நாடுகள் உள்ளன. அப்படி பாடப்படவிட்டாலும் இலங்கையில் முதன் முதலில் இரண்டு மொழிகளில் பாடுவது உலகத்திற்கு வழங்கும் முன்னுதாரணம் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் பாடுவதை சிங்கள அடிப்படைவாதிகள் விமர்சித்து வந்தனர்.

எது எப்படி இருந்த போதிலும் பிரதமர் மகிந்த ராஜபக்ச கடந்த 14 ஆம் திகதி தமிழ் ஊடக பிரதானிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது சிங்களத்தில் மாத்திரம் தேசிய கீதத்தை பாடுவது என்ற எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனக் கூறியிருந்தார்.

தேசிய கீதம் தொடர்பான பிரச்சினையை தான் பத்திரிகைகள் மூலம் அறிந்ததாகவும் சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதத்தை பாட வேண்டும் என்று தான் மேடைகளில் கூறுவதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். ஒரு நாட்டுக்கு ஒரு மொழியில் தேசிய கீதம் இருக்க வேண்டும் எனவும் இந்தியாவில் பல மொழிகள் இருந்த போதிலும் ஒரு மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

தமிழ் நிகழ்வுகளில் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாட முடியும் எனவும் அதற்கு தடையில்லை எனக் கூறியிருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் என்ற வகையில் அது குறித்து தீர்மானங்களை எடுக்கவில்லை எனவும் பல்வேறு கொள்கைகளை கொண்டு அரசியல்வாதிகளின் கருத்துக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல எனவும் குறிப்பிட்டிருந்தார்.