மூன்று பிள்ளைகளின் பரிதாபம்… வவுனியாவில் தாய் பலி!

வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் 3 பிள்ளைகளின் தாயொருவர் பரிதபமாக உயிரிழந்துள்ளார்.

பாடசாலையில் இருந்து தனது பிள்ளையை வீட்டுக்கு ஏற்றிச்சென்ற தாய் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இந்த விபத்தில் மாணவன் உட்பட இருவர் படு காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த பகுதியில் அமைந்துள்ள வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில் நின்ற வாகனம் ஒன்றினை அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் பின்புறம் நோக்கி செலுத்தியுள்ளார்.

இதன் போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வேகமாக சென்று வீதியால் பயணித்துக்கொண்டிருந்த இரு துவிச்சக்கர வண்டியுடன் மோதி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்தின் வேலியையும் சேதமாக்கியுள்ளது.

விபத்தில் துவிச்சக்கர வண்டியில் தனது 7 வயது பாடசாலை மாணவனை ஏற்றிச்சென்ற இளம் தாய் உட்பட, பாடசாலை மாணவனும் மற்றுமொரு பெண்ணும் படு காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் ச. புஸ்பராணி வயது 36 என்ற 3 பிள்ளைகளின் தாய் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.