கொழும்பு – தெகிவளை மிருகக் காட்சிச் சாலையில் தாயால் கைவிடப்பட்ட சிங்கக் குட்டி ஒன்றை தனது வீட்டில் வைத்து வளர்த்த மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த ஹேஷன் மெண்டிஸ், சில வருடங்களின் பின்னர் அதனை ரிடியகம சஃபாரி பூங்காவில் இன்று சந்தித்தார்.
இதன்போது அவரை மறக்காத சிங்கம் அவரோடு சினேகபூர்வமாக நடந்துகொண்டது.
‘இன்று அந்தச் சிங்கத்தின் 6-ஆவது பிறந்த நாள். இதனையொட்டி அதைப் பார்வையிட வந்தேன். அது என்னை அடையாளம் கண்டுகொண்டது. அதை நான் முத்தமிட்டேன்’ என ஹேஷன் மெண்டிஸ் தெரிவித்தார்.
தெகிவளை மிருகக்காட்சி சாலையில் 2014 ஆம் ஆண்டு இந்தச் சிங்கக் குட்டி பிறந்தது. எனினும் தாயால் நிராகரிக்கப்பட்ட இக்குட்டி அனாதரவானது.
இதற்கு பாலூட்ட வழியில்லாது திணறிய மிருக்கக் காட்சி சாலை நிர்வாகத்தினர், அதற்கு ஒரு வாடகைத் தாயைத் தேடினர்.
அப்போது ஹேஷன் மெண்டிஸ் வீட்டில் குட்டி ஈன்ற நாயுடன் இதனைச் சேர்ந்து பாலூட்ட வைக்க தீர்மானிக்கப்பட்டது.
சிங்க குட்டியை வீட்டில் வளர்ப்பது சட்டவிரோதமானது எனக் கூறி முதலில் ஹேஷன் மெண்டிஸ் இந்த யோசனைக்கு மறுப்புத் தெரிவித்தார்.
ஆனால் எந்த பிரச்சினையும் இருக்காது என மிருகக்காட்சி சாலையின் அதிகாரிகள் உறுதியளித்த பின்னர் பின்னர் அதற்கு ஹேஷன் மெண்டிஸ் ஒப்புக்கொண்டனர்.
இந்தச் சிங்கக் குட்டி 3 வாரங்கள் ஹேஷனின் இல்லத்தில் நாயிடம் பால் குடித்து வளர்ந்தது. ஹேஷன் மெண்டிஸின் செல்ல நாய் ஷெல்லி முதலில் சிங்கக் குட்டியை ஏற்கத் தயங்கியபோதும் பின்னர் அதனைக் கவனித்து பால் ஊட்டியது.
3 வாரங்களுக்குப் பின்னர் சிங்கக் குட்டி ஓரளவுக்கு வளர்ந்ததும் அதனை நாயிடம் இருந்து பிரித்து மிருகக் காட்சிச் சாலைக்கு எடுத்துச் சென்றனர்.
“சிங்கக் குட்டியுடன் 3 வாரங்கள் கழித்தது கடினமாக இருந்தாலும் அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சிங்கக் குட்டிக்கு உணவளிக்க வேண்டியிருந்ததால் அந்த மூன்று வாரங்களும் என்னால் 2 மணி நேரம் மட்டுமே தூங்க முடிந்தது” என்று ஹேஷன் மெண்டிஸ் கூறினார்.

தெகிவளை மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிங்கக் குட்டி பின்னர் ரிதியாகம சஃபாரி பூங்காவிற்கு மாற்றப்பட்டது.
தற்போது இந்தச் சிங்கத்துக்கு 6 வயது, ரிடியகம சஃபாரி பூங்காவில் சுதந்தரமாகச் சுற்றி வருகிறது.






