கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு முஸ்லிம் பிரதிநிதிகளின் கடும் எதிர்ப்பை நிராகரித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அதன் முதல் பணியாக எல்லை நிர்ணயக் குழுவை நியமித்து விரைவாக அறிக்கைத் தருமாறு பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
“கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் 1993ஆம் ஆண்டு ஒரு இனக்குழுவினரால் பிரிக்கப்பட்டது. அப்போதுவிட்ட தவறு இப்போது இன ரீதியாகத் தனிமைப்படுத்த காரணமாக அமைந்துள்ளது.
எனவே அதனை தரமுயர்த்துவது அவசியமாகும்” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கல்முனை உப பிரதேச் செயலகத்தை தரம் உயர்த்துவது தொடர்பில் ஆராயம் கூட்டம் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கஜன் இராமநாதன், சதாசிவம் வியாழேந்திரன், எச்.எம்.எம். ஹரிஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாவுல்லா, கிழக்கு மாகாண ஆளுநர், அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட அதாவுல்லா, “கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை இன ரீதியாக பிரிக்கப்படவேண்டுமா? அதனைத் தவிர்த்து இனங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவோம்” என தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு எதிராக தனது கருத்தை முன்வைத்தார்.
ஏனைய முஸ்லிம் பிரதிநிதிகளும் உப பிரதேச செயலகத்தை எதிர்ப்பை வெளியிட்டனர்.
“கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் போரைக் காரணமாகக் கொண்டு இன ரீதியாகவே ஒரு இனத்தவர்களால் முன்னர் பிரிக்கப்பட்டது.
அந்த இனத்தவர்களின் தவறே தற்போது பெரியளவில் பிரச்சினையாக எழுந்துள்ளது. ஒரு இனத்தவர்களுக்கு பிரதேச செயலர், கணக்காளர் சேவையாற்றும் போது, ஒரு இனத்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்.
எனவே இந்த விடயத்தில் தீர்க்கமான முடிவை எட்டவேண்டும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
அனைவரது கருத்தை செவிமடுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் 1993ஆம் ஆண்டு ஒரு இனக்குழுவினரால் பிரிக்கப்பட்டது.
அப்போதுவிட்ட தவறு இப்போது இன ரீதியாகத் தனிமைப்படுத்த காரணமாக அமைந்துள்ளது. எனவே அதனை தரமுயர்த்துவது அவசியமாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
எனவே கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு முதல் பணியாக எல்லை நிர்ணயத்தை முன்னெடுப்போம்.
அதற்கு எல்லை நிர்ணய சபை உடனடியாக அமைத்து அறிக்கையைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று பொது நிருவாக, உள்நாட்டு அமைச்சின் செயலாளரை பிரதமர் பணித்தார்.
எல்லை நிர்ணயத்தை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ், எவரும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இன்றைய கூட்டத்தில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் பங்கேற்கவில்லை என்பதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனும் கூட்டத்தின் இறுதியிலேயே பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






