எமது ஆதரவு எந்த வகையிலும் யாருக்கும் இல்லை: அநுர திட்டவட்டம்

கூட்டணி ஆட்சியமைக்க தமது கட்சியின் ஆதரவு எந்த வகையிலும் வழங்கப்பட மாட்டாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்த அரசியல் கட்சிக்கும் 45 வீதத்திற்கும் மேல் வாக்குகள் கிடைக்கவில்லை. அத்துடன் 167 உள்ளூராட்சி சபைகளில் எவருக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாது.

இந்த உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியை கைப்பற்ற மற்றுமொரு தரப்புடன் கூட்டணியை ஏற்படுத்த வேண்டும். இதனால், இரண்டு தரப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவை கோரியுள்ளனர்.

குறித்த உள்ளூராட்சி சபைகளின் தலைவர் பதவியை தருவதாகவும் யோசனை முன்வைத்துள்ளனர். எனினும் எமக்கு வாக்களித்த7 லட்சத்து 15 ஆயிரம் மக்கள் எவருடனும் கூட்டணி சேர எமக்கு வாக்களிக்கவில்லை. கூட்டணி ஆட்சியை ஏற்படுத்துவது எமது பணியல்ல.

உள்ளூராட்சி சபைகளிலும் அவற்றுக்கு வெளியிலும் நேர்மையான மக்கள் சேவையாற்றுவதே எமது உறுப்பினர்களின் பணியாகும். மக்களுக்கான இந்த சேவையை எந்த குறையும் இன்றி மேற்கொள்வோம் என்று உறுதி கூறுகிறோம்.

அதேவேளை நாட்டில் தற்போது ஸ்திரமற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுமே இதற்கு முற்றாக பொறுப்புக் கூறவேண்டும்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி ஆட்சியில் இருந்த அரசாங்கத்தை வீழ்த்திய போது நாட்டு மக்களுக்கு ஒரு அரசியல் தேவை இருந்தது.

மக்களின் தனிப்பட்ட தேவைக்காக கடந்த ஆட்சியை மக்கள் வீழ்த்தவில்லை. நாட்டின் பொது அரசியல் தேவைக்காகவே மக்கள் கடந்த அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்றினர். அந்த தேவையை நல்லாட்சி என்று சுருக்கி கூறினர்.

நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்தி, ஊழல்,மோசடிகளை நிறுத்தி,ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கி, பொருளாதாரத்தை சிறந்த திசை நோக்கி திருப்பி,சிறந்த அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தும் தேவை இருந்தது.

எனினும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து மக்களின் தேவைக்கு முரணாக செயற்பட்டது. மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது பதவியை எப்படி பாதுகாப்பது என்ற கனவில் இருந்தார்.

ரணில் விக்ரமசிங்க, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கு வருவது குறித்த கனவில் இருந்தார். இவர்கள் இருவரது தனிப்பட்ட தேவைகள் மேழேந்தன.

இதன் பிரதிபலன்களையே தற்போது அவர்கள் அனுபவித்து வருகின்றனர். ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக அவர்களை பாதுகாத்தனர். ரணிலும் மைத்திரியும் ஊழல்வாதிகளுக்கு தண்டனையை வழங்காது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவர்களின் ஆதரவை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எமது ஆதரவு எந்த வகையிலும் யாருக்கும் இல்லை: அநுர திட்டவட்டம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like