யாழ், சாவகச்சேரி, பருத்துறை உட்பட 5 சபைகளில் காங்கிரஸ் ஆட்சியமைக்க முயற்சி! கஜேந்திரகுமர் அதிரடி அறிவிப்பு

யாழ், சாவகச்சேரி, பருத்துறை உட்பட 5 சபைகளில் காங்கிரஸ் ஆட்சியமைக்க முயற்சி! கஜேந்திரகுமர் அதிரடி அறிவிப்பு

“யாழ். மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டி பிரதேச சபை ஆகியவற்றுக்கு தெரிவாகியுள்ள வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் எம்முடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அவ்வாறு முன்வந்தால் அந்தச் சபைகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்) பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் உள்ளது.

அந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியினராகிய நாங்கள் சரியாக பயன்படுத்துவோம்.”

– இவ்வாறு நேற்று தெரிவித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ள உள்ளூராட்சிச் சபைகளில் உதிரிகளை இணைத்துக்கொண்டு ஆட்சியமைக்கும் திட்டத்தை ஏனையோர் மறந்துவிடவேண்டும்.

அவ்வாறு செய்யக்கூடாது. எமது உறுப்பினர்கள் அவ்வாறு சோரம் போக மாட்டார்கள் என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் செயலாளர் என்.சிறீகாந்தா நேற்றுமுந்தினம் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு :-

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி பருத்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை ஆகியவற்றில் அதிகப்படியான ஆசனங்களை பெற்றிருக்கின்றது. எனவே அந்த இரு நகரசபைகளிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி ஆட்சியமைக்கும்.

அதே போல் யாழ்.மாநகரசபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டி பிரதேச சபை போன்றவற்றிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி ஆட்சியமைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.

இந்த சபைகளில் அதிகப்படியான ஆசனங்களை பெற்று முதன்மையாக இல்லாவிட்டாலும் வேறு கட்சிகளை சேர்ந்த – சுயேற்சைக்குழுக்களை சேர்ந்த – உறுப்பினர்கள் எங்களுடன் இனைவதற்கான விருப்பத்தை நேரடியாக தெரிவித்துள்ளனர்.

விருப்பம் தெரிவித்திருக்கும் உறுப்பினர்கள் எங்களுடன் இணைந்து கொள்வார்களாயின் யாழ்.மாநகரசபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டி பிரதேச சபை போன்றவற்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் உள்ளது.

அந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாங்கள் சரியாக பயன்படுத்துவோம் என்றார்.