ஆசையால் வந்த வினை! அதி நவீன மாளிகைக்குள் மாட்டினார் முதல்வர் ஆர்னோல்ட்

கடந்த வருடம் யாழ் மாநகரப் பகுதியில் தொலைக்காட்சி கேபிள் சேவையை மேற்கொள்ள TRY Media என்ற நிறுவனத்திற்கு கம்பங்களை நாட்ட அனுமதி மறுத்த யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட், தற்போது எதுவித சபை அனுமதியும் இன்றி மற்றொரு ஊடக நிறுவனமான ASK Media வுக்கு கம்பங்களை நாட்ட அனுமதி கொடுத்துள்ளமை பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

அது மட்டுமல்லாது மறைக்கப்பட்ட அதிர்ச்சியான உண்மை ஒன்றினையும் அந்த சர்ச்சை வெளிக்கொண்டு வந்துள்ளது.

அதாவது TRY Media என்ற ஊடக நிறுவனம் யாழ் மாநகரசபையின் ஆளுமைக்குள் தனது சேவையை மேற்கொள்ள கம்பங்களை நாட்டுவதற்கான அனுமதியை யாழ் மாநகரிடம் கோரியிருந்தது.

அத்துடன் சபையின் அனுமதி பெறாது மத்திய அரசின் அனுமதியுடன் தனது எல்லைக்குள் கம்பங்களை நாட்டியதாக கூறி குறித்த நிறுவனத்தின் கம்பங்களையும் முதல்வர் அகற்றி இருந்த நிலையில் இந்த விடயம் நீதிமன்றம் சென்று தற்போது வழக்கு நடைபெற்று வருகின்றது.

இதேவேளை சபையின் வருமானத்தை பாதிக்கும் என்பதாலும் இன்னும் சில காரணங்களாலும் அனுமதி மறுக்கப்பட்டதுடன் தனியார் எவருக்கும் தொலைக்காட்சி கேபிள் சேவை மேற்கொள்ளும் கம்பங்களை நாட்டுவதற்கு அனுமதி கொடுப்பதில்லை எனவும் சபையில் கடந்த வருடம் முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ASK Media என்ற ஊடக நிறுவனம் முதல்வர் ஆர்னோல்ட்டுடன் தன்னிச்சையான உறவை ஏற்படுத்தி தனது நிறுவனத்தின் கம்பங்களை யாழ். மாநகர பகுதிக்குள் நாட்டுவதற்கு சம்மதம் பெற்றுள்ளது.

இந்த அனுமதியை குறித்த நிறுவனம் பெற்றுக்கொள்வதற்காக முதல்வர் ஆர்னோல்ட்டுக்கு ஆடம்பர மாளிகை ஒன்றை கட்டித் தருவதாக பேரம் பேசப்பட்டு தற்போது அவரது பழைய வீடு இடிக்கப்பட்டு அதி நவீன ஆடப்பர மாளிகை கட்டப்பட்டு வருவதாக பரவலாகப் பேசப்படுகின்றது.

பிரபல காப்பறுதி நிறுவனம் ஒன்றில் பொறுப்பு மிக்க பதவியில் இருந்த போதே யாழ் நகரப் பகுதியில் தனக்கான ஒரு சிறிய வீட்டை கூட கட்டமுடிக்காத முதல்வர் ஆர்னோல்ட் , தற்போது முதல்வரானவுடன் யாழ் மாநகரின் பல்வேறு விடயங்களில் தன்னிச்சையான முடிவுகளை எடுத்து திரைமறைவில் பேரம் பேசி குறிப்பாக 5G கம்பங்கள் நாட்டியது போன்ற அனுமதிகளை கொடுத்து கோடிக்கணக்கில் கையூட்டல்களை பெற்று வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதுமட்டுமல்லாது தனது பதவியை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு சென்றுவரும் முதல்வர் ஆர்னோல்ட், அங்குள்ள புலம்பெயர் மக்களிடம் பெருந்தொகை பணங்களை பெற்று அவற்றை தனது வங்கிக் கணக்கில் சேமித்தும் வருவதாகவும் நம்பகரமான தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் தான் குறித்த கம்பங்களை நாட்ட எவருக்கும் அனுமதி வழங்குவதில்லை என சபையில் முடிவு எடுக்கப்பட்டிருந்த போதும், தனக்கு ஆடம்பர வீடு ஒன்றை கட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கனவை ,நீதிமன்றில் ஏற்கனவே குறித்த விடயம் தொடர்பான மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும் ASK Media என்ற ஊடக நிறுவனத்திற்கு அனுமதியை முதல்வர் வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது சாதாரண நடுத்தர குடும்பத்தில் இருந்த முதல்வர் ஆர்னோல்ட் தற்போது கோடிக்கணக்கில் வீடு ஒன்றை அதுவும் அதிநவீன வசதிகளுடன் கட்டுகின்றார் என்றால் அதற்கு எப்படி பணம் அவருக்கு கிடைத்தது? எனவும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் அரசியலில் வந்தால் அளவுக்கதிகமான பணம் எவ்வாறு கிடைக்கிறது என்பது தொடர்பில் வருவாய் துறை தரப்பினரோ இலஞ்ச ஊழல் தரப்பினரோ கண்டுகொள்வதில்லையா? எனவும் அரசல் புரசலாக பேசப்படுகின்றது.

எது உண்மையோ இல்லையோ முதல்வர் ஆர்னோலட் இன்னும் சில மாதங்களில் தனது பதவியை விட்டு விலகவுள்ள நிலையில் அவருக்கு மூன்று கோடிக்கும் அதிகமான கையூட்டு வழங்கப்பட்டே இந்த வீடு கட்டப்படுவதாக அவருக்கு நெருக்கமான தரப்பினர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.