கொத்துக் கொத்தாக மடியும் சீனமக்கள்….வெளியே வந்தார் சீன அதிபர் ஜின்பிங்!

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் உக்கிரமாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உலகின் பொருளதார வல்லரசான சீனாவை கொரோனா வைரஸ் சீரழித்து விட்டது என சொல்லுமளவுக்கு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வரை 42,000 க்கும் மேற்பட்டவர்களைக் கொரோனா தாக்கியுள்ளதுடன் உலகளவில் 1.87 லட்சம் பேருக்கு கொரோனா தாக்கியிருக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பின் மருத்துவர்கள் குழு இன்று சீனா வருகிறது. இதற்கிடையே, அமெரிக்காவில் வாழும் சீன தொழிலதிபரான குவாங் வெங்கூய், “15 லட்சம் சீன மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 50,000 க்கும் மேற்பட்ட சடலங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சீன அரசு உண்மையான தகவல்களை மறைத்து வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸால் பெரிதும் பாதிக்கப்பட்ட வுகான் நகரிலிருந்து 50 லட்சம் பேரைக் காணவில்லை. அவர்கள் எங்கே சென்றனர் என்றும் செய்திகள் வெளியாகி பீதிய ஏற்பட்டுத்தியுள்ளது.

இதேவேளை 2003- ம் ஆண்டு சீனாவை சார்ஸ் வைரஸ் தாக்கிய போது 774 உயிர்கள் பலியாகின. இப்போது, கொரோனா சீன மக்களை கொத்துக் கொத்தாகக் கொன்று வருகிறது.

இந்நிலையில் சீன பிரதமர் லீ கெக்யாங் வசம் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் பணியை சீன அதிபர் ஜின் பிங் ஒப்படைத்துள்ளார். வுகானுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை லீ கெக்யாங் பார்வையிட்டார். ஆனால், சீன அதிபர் ஷீ ஜின்பிங் பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைந்து விட்டதாகவும் கடந்த மூன்று வாரங்களாக அவர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

சாகும் வரை சீன அதிபராக இருக்கும் வகையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சட்டத்திருத்தம் கொண்டு வந்த ஜின்பிங் மக்களின் இக்கட்டான தருணத்தில் உடனிருந்து உதவவில்லை என்றும் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து ஜின்பிங் குடும்பத்துடன் வெளியேறி விட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இந்தத் தகவலில் உண்மை இல்லை என இன்று தெரியவந்திருக்கிறது.

சீன அதிபர் ஜின்பிங் நேற்று பெய்ஜிங்கில் உள்ள திதான் மருத்துவமனைக்குச் சென்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைப் பார்வையிட்டுள்ளார். அப்போது, சீன அதிபர் முகமூடி மற்றும் கையுறை அணிந்திருந்ததுடன் தனக்கும் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா’ என்று பரிசோதித்துக்கொண்டார். மேலும், வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் வீடியோ கான்பரன்ஸிங் வழியாக ஜின்பிங் பேசி மக்களுக்கு ஆறுதலளித்தார்.

எனினும் கொரோனா விஷயத்தில் சீன சுகாதாரத்துறை அலட்சியம் காட்டியதன் விளைவாகவே அதிகளவில் உயிர்கள் பலியானதாகச் சொல்லப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதத்திலேயே சார்ஸ் போன்ற வைரஸ் சீனாவைத் தாக்கியுள்ளதாக வீ சாட் மெசஞ்சரில் மருத்துவர்கள் சிலர் பேசிக் கொண்டதும் தற்பொழுது தெரிய வந்துள்ளது.

சீனாவில் பள்ளி, பல்கலைக்கழகங்கள் இன்னமும் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் போக்குவரத்து இல்லை. மக்கள் கூட்டமாகச் சேர்ந்து உணவு அருந்தவேண்டாம் என்றும் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு அமர்ந்து கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா பாதிப்பால் பொருளாதார ரீதியாகவும் சீனாவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.