அண்ணே காப்பாத்துங்கண்ணே… 16 நிமிடமாக கெஞ்சிய மாணவர்! பரிதாபமாக உயிர்பிரிந்த சோகம்

காஞ்சிபுரத்தில் விடுமுறையில் கிரிக்கெட் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய கல்லூரி மாணவர் ஒருவர் மூச்சுத்திணறி பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

காஞ்சிபுரம், கீரை மண்டபம் பகுதியில் வசிப்பவர் நடராஜ். இவரது மகன் கணேஷ்குமார். கல்லூரியில் படித்து வரும் இவர் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அருகில் இருந்த மேல்பள்ளி வளாகத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.

விளையாடி முடித்த பின்பு தண்ணீர் குடிப்பதற்கு சென்ற கணேஷிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறிது நேரத்தில் அதே இடத்தில் சுருண்டு விழுந்துள்ளார்.

இதனை அவதானித்த ஒருவர் குடும்பத்திற்கு தகவல் கூறவே, அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து அரை மணி நேரம் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார்.

கதறிய பெற்றோர் மகனின் செல்போனை எதார்த்தமாக எடுத்துப் பார்த்த போது அதில் 108 ஆம்புலன்ஸிற்கு போன் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி செல்போனில் உள்ள கால் ரெக்கார்டை எடுத்துப் பார்த்த போது, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கணேஷ் கெஞ்சியுள்ள ஆடியோவை கேட்ட பெற்றோர் நிலைகுலைந்து போயுள்ளனர்.

அதில் கணேஷ் குமார் பதற்றத்துடன், “நான் பச்சையப்பன் ஸ்கூல் கிட்ட இருக்கிறேண்ணா… மூச்சு முட்டுது கொஞ்சம் சீக்கிரம் வாங்கண்ணா” என்கிறார்… “சீக்கிரம்னா எங்கிருந்து வர்றது? நீங்க எங்க இருக்கீங்கன்னு தெளிவா சொல்லுங்க… பயப்படாதீங்க… பக்கத்துல யாராவது இருந்தா போனை அவங்க கிட்ட குடுங்க.. பக்கத்துல யாருமேவா இருக்கமாட்டாங்க” என்று பதில் வருகிறது.

“ஆமாண்ணா.. யாருமே இல்லை.. சீக்கிரமா வாங்கண்ணா.. என்னை காப்பாத்துங்கண்ணா” என்று கணேஷ்குமார் திணறி திணறியே தான் இருக்கும் அட்ரஸை சொல்ல… “நீங்கதான் பக்கத்தில் யாராவது இருக்காங்களான்னு பார்க்கணும்… போங்க.. டக்குன்னு நடந்துபோய் யாரையாவது எங்களுக்கு கால்பண்ண சொல்லு” என்று அலட்சிய பதிலுடன் குறித்த ஆடியே முடிவடைந்துள்ளது.

கணேஷ்குமாருக்கு ஏற்கெனவே சுவாசகோளாறு இருந்ததும், அதற்கு சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். ஆதலால் விளையாடி தருணத்தில் இவ்வாறு பிரச்சினை வரவே உடனே சுதாரித்து ஆப்புலன்ஸிற்கு போன் செய்துள்ளார். 16 நிமிடம் உயிருக்கு போராடி.. கெஞ்சி பேசியும் 108 அலட்சியம் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஆனால் குறித்த ஆப்புலன்ஸ் சாரதி, கணேஷ்குமார் இடத்தினை சரியாக கூறவில்லை என்றும் இடம் தெரியாததால் தங்களால் வரமுடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.