நல்லூர் பிரதேச சபையின் அசமந்த போக்கு ; அவதிப்படும் பொதுமக்கள்

யாழ் மாவட்டத்தில் உள்ள வருமானம் கூடிய பெரிய சந்தை திருநெல்வேலி சந்தை ஆகும் . இது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள நல்லூர் பிரதேச சபையின் நிர்வாக கட்டமைப்புக்குள் நிர்வகிக்கப் படுகின்றது .

இச் சந்தையின் கிழக்கு பக்கமாக உள்ள பரமேஸ்வரா வீதியில் சந்தையின் கழிவு நீர் விடப்படுகின்றது .

குறித்த வீதியானது பரமேஸ்வரா கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், சந்தைக்கு வரும் பொது மக்கள் என பலரும் அதிகம் பயன்படுத்தும் வீதி ஆகும் . அருகில் சமிக்ஞை விளக்கு உள்ளதால் காலை மாலை நேரங்களில் மாணவர்கள் , வேலைக்கு செல்வோர் என பலரும் அதிகமாக இவ்வீதியை பயன்படுத்துகின்றனர் .

சந்தையிலிருந்து வரும் கழிவு நீரானது சீரான வடிகாலமைப்பு இல்லாததால் தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வருகின்றது. சந்தையிலுள்ள மலசலகூடத்தை கழுவும் நீரும் வீதியிலேயே தேங்கி நிற்கின்றது. நீர் வீதியில் தேங்கி நிற்பதால் நுளம்பு பெருக்கம் ஏற்படும் வாய்ப்பும் அதிகமாக காணப்படுகின்றது.

நாடு பூராகவும் டெங்கு பற்றி கடும் சட்டம் அமுலில் உள்ள நிலையில் நல்லூர் பிரதேச சபையில் இந்த அலட்சிய போக்கு பிரதேச வாசிகளை பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளது. “சட்டத்தை அமுல்படுத்தும் பிரதேச சபையே சட்டத்தை கடைப்பிடிக்காவிட்டால் பொதுமக்கள் எவ்வாறு கடைப்பிடிப்பார்கள் ” என பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் .

தேங்கி நிற்கும் நீரில் பாசி படர்ந்து காணப்படுவதால் அவ்வழியே பாடசாலை செல்லும் மாணவர்கள் வழுக்கி விழ தவறுவதில்லை . அண்டிய பிரதேசத்தில் வயது முதிர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். மற்றும் பாடசாலை அமைந்துள்ளதால் சிறு பிள்ளைகள் அதிகளவில் உலாவி வரும் சூழ்நிலையில் நோய்த்தொற்று இலகுவில் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதை பிரதேச சுகாதார பரிசோதகர் அறியார் போலும்.

சீரான வடிகாலமைப்பு இல்லாது சந்தையை நிர்மாணம் செய்தது யார் குற்றம் ?

தனியாருக்கு விதிக்கப்படும் சுகாதார விதிமுறைகள் பிரதேச சபைக்கு இல்லையா?

போன்ற மக்களின் கேள்விகளுக்கு யார் தான் பதில் கூறுவாரோ தெரியவில்லை.

மேற்படி கழிவு நீரானது முறையான வடிகாலமைப்பு அமைக்கப்பட்டு பேணப்பட வேண்டியது பிரதேச சபையின் கடமையாகும். தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதேச நிர்வாகிகள் தமது கட்சி பேதம் இன்றி மேற்படி பிரச்சினைக்கு உரிய தரப்பினர் கவனமெடுத்து உரிய தீர்வை வழங்க வேண்டும் என பிரதேச மக்கள் தமது ஆதங்கத்தை தெரிவித்தனர்.