மஹா சிவராத்திரி: திருக்கேதீஸ்வரத்தில் விசேட ஏற்பாடு

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மன்னார் திருக்கேதீஸ்வர கோவிலில், 300 பொலிஸார் விசேட கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ், நிலைமையைப் பொறுத்து, மேலதிகமாக பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில், இராணுவத்தினரின் உதவியும் பெறப்படுமெனவும் கூறினார்.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு மன்னார் திருக்கேதீஸ்வர கோவிலின் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆராயும் கூட்டம், திருக்கேதீஸ்வர கோவில் மண்டபத்தில், வௌ்ளிக்கிழமை (14) மாலை, மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தனி பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையில், போக்குவரத்துச் சேவையை முன்னெடுப்பதற்கு தயாரென, இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ் தரப்பினர் தெரிவித்தனரெனவும் இற்கமைய, 50 இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களும் 50 தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடவுள்ளனவெனவும் கூறினார்.

அத்துடன், சுகாதாரம், வைத்திய சேவைக்கு, பெப்ரவரி 20ஆம் திகதியிலிருந்து 4 வைத்தியர்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்த அவர், கேதீச்சரத்தில், ஓ​ர் அம்பியூலன்ஸ் வண்டி சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் கூறினார்.