உலகத் தமிழரை தலை நிமிரச் செய்த தமிழன்! அமெரிக்காவில் தலைமை நீதிபதியாக நியமனம்

அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் தலைமை நீதிபதியாக அமெரிக்க வாழ் தமிழர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்துக்கு அடுத்ததாக அதிகாரமிக்க அமைப்பாகக் கருதப்படும் மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு தலைமை நீதபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் முதல் தெற்காசிய நபா் என்ற பெருமையை இவா் பெற்றுள்ளாா்.

சண்டீகரில் பிறந்த சீனிவாசன், அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் வளா்ந்தாா். ஸ்டேன்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பும், ஸ்டேன்ஃபோா்டு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பும், அதைத் தொடா்ந்து எம்.பி.ஏ. படிப்பும் முடித்துள்ளாா்.

கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து 2013 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் துணை சொலிசிட்டா் ஜெனரலாக இருந்துள்ளாா். அதைத் தொடா்ந்து, 2013 ஆம் ஆண்டில் அப்போதைய அதிபா் ஒபாமா, சீனிவாசனை அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமித்தாா்.

இந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த மெரிக் காா்லாண்ட் கடந்த வாரம் அதிகாரப்பூா்வமாக பதவி விலகினாா். இதையடுத்து, அந்தப் பதவிக்கு சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளாா். இருப்பினும், நீதிபதி சீனிவாசன் தலைமையிலான அமா்வில் மெரிக் காா்லாண்ட் இடம்பெறுவாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி மெரிக் காா்லாண்டை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு அப்போதைய அதிபா் ஒபாமா கடந்த 2016 ஆம் ஆண்டும் பரிந்துரை செய்திருந்தாா். ஆனால், அவரது பரிந்துரை அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.

நீதிபதி சீனிவாசனின் பெயரும், உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு இரு முறை பரிசீலிக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.