சாய்ந்தமருதிற்கு தனியான நகரசபை வழங்குவதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி தற்காலிமாக இடைநிறுத்தம்!

கல்முனை மாநகரசபையிலிருந்து பிரிந்து சாய்ந்தமருதிற்கு தனியான நகரசபை வழங்குவதற்கு கடந்த 15ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

நாடு தழுவிய ரீதியில் பல பிரதேசங்களில் புதிதாக நகர சபைகள் உருவாக்குவதற்கான தேவை காணப்படுவதால் ஒரு பிரதேசத்திற்கு மாத்திரம் விசேட வர்த்தமானி வெளியிடாமல் புதிதாக உருவாக்கவுள்ள நகர சபைகள் அனைத்திற்கும் ஒரே வர்த்தமானி வெளியிட கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் காரணம் சுட்டிக்காட்டியுள்ளது.

மட்டக்களப்பு சாய்ந்தமருது பகுதிக்கு நகர சபை அமைப்பதற்கான அங்கீகாரம் அளிக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பை கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டிருந்தார்.

எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று மாலை நடைபெற்றிருந்த அமைச்சரவை சந்திப்பின்போது, இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைச்சர் விமல் வீரவன்ச கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இப்படியான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியமை தனக்கு தெரியாது என்பதை உள்விவகார அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் அமைச்சரவையில் கருத்து முன்வைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது, குறித்த வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தப்பட்டமைக்கு காரணமொன்றை வெளியிட்டார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“சாய்ந்தமருது நகர சபை உருவாக்கத்திற்கான யோசனையை 2018ம் ஆண்டு உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக பதவி வகித்த பைஸர் முஸ்தபா சமர்ப்பித்திருந்தார்.

இந்த பத்திர யோசனைக்கு அமையவாகவே சாய்ந்தமருது நகர சபை உருவாக்கத்திற்கு கடந்த15ம் திகதி சனிக்கிழமை அங்கிகாரம் வழங்கபட்டடிருந்தது. வெளியிடப்பட்ட வர்த்தமானி மீள்பரிசீலனை செய்ய வேண்டிய தேவை காணப்படுகின்றது.

அதாவது நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் புதிதாக நகர சபை உருவாக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. சனத்தொகையினை அடிப்படையாகக் கொண்டு நகர சபைகள் உருவாக்கப்படுகின்றன.

அதனடிப்படையில் பார்க்கும் போது கொழும்பு மாவட்டத்தில் தற்போது உள்ள நகர சபைகளை காட்டிலும் மேலதிகமாக புதிய நகர சபைகள் உருவாக்கப்பட வேண்டும்.

சாய்ந்தமருது நகர சபைக்கு மாத்திரம் விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்க முடியாது. நாடு தழுவிய ரீதியில் புதிதாக நகர சபை உருவாக்க வேண்டிய தேவை காணப்படுவதால் அனைத்து தீர்மானங்களையும் ஒன்றுப்படுத்திய வர்த்தமானியே வெளியிடப்படும்.

இதன் காரணமாகவே சாய்ந்தமருது நகர சபை உருவாக்கத்திற்கு ஏற்கனவே விடுக்கப்பட்ட வர்த்தமானி தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.