நிறைவான கிராமம் திட்டத்தை நிறைவேற்ற பிரதேச சபைகள் மறுப்பு – நிதி வேறு பிரதேசங்களுக்கு மாற்றப்படும் என்கிறார் அங்கஜன் எம்.பி.

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு நிறைவான கிராம் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் வலி.தெற்கு மற்றும் வலி. கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதி திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிறைவான கிராம் திட்டத்தில் ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவிலும் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மக்களால் முன்மொழியப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த திட்டத்துக்கான மதிப்பீடுகளை இன்று 20ஆம் திகதி வியாழக்கிழமைக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தது. அத்துடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும் இன்றைய தினம் அனைத்து மதிப்பீடுகளை வழங்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.

இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வலி. தெற்கு பிரதேச சபையும் வலி.கிழக்கு பிரதேச சபையும் மதிப்பீடுகளை நேற்று மாலை வரை ஒப்படைக்கவில்லை என்று அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. மதிப்பீடுகளை சபைகள் வழங்காவிடின் அந்த பிரதேசத்துக்கான நிதி ஒதுக்கீடு திரும்பிவிடும் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

வலி.கிழக்கு பிரதேச சபைக்கு உள்பட்ட 31 கிராமங்களில் 54 அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்ற 62 மில்லியன் ரூபாய் நிதியும் வலி.தெற்கு பிரதேச சபைக்கு உள்பட்ட 30 கிராமங்களில் 60 அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க 60 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வலி. கிழக்கு மற்றும் வலி. தெற்கு பிரதேச சபைகள் தவிர்ந்த யாழ்ப்பாணம் மாநகர சபை, பருத்தித்துறை, சாவகச்சேரி நகர சபை உள்ளிட்ட ஏனைய சபைகள் மதிப்பீடுகளை வழங்கி திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்கியுள்ளன என்றும் அதிகாரிகள் கூறினர்.

மக்களால் முன்மொழியத் திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனால் முன்மொழியப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது, நிதி திரும்பிச் சென்றாலும் பரவாயில்லை அனுமதியளிக்கமாட்டோம் என்று இரண்டு பிரதேச சபைகளின் தவிசாளர்களும் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

“தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுவந்தவை எனக் கூறி கம்பரலியா திட்டங்களை நடைமுறைப்படுத்த வலி. கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் வலி. தெற்கு பிரதேச சபைத் தவிசாளரும் பெரும் பாடுபட்டனர்.
எனினும் மக்களுக்கு நன்மையளிக்கும் நிறைவான கிராமம் திட்டத்தின் ஊடாக வரும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை நடைமுறைபடுத்த அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிராகரித்துள்ளனர்.

அந்தப் பிரதேசங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வேறு பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டு அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குக் கிடைத்த நிதியை ஒருபோதும் திரும்புவதற்கு அனுமதியளியோம்.
தனிப்பட்ட அரசியலுக்காக செயற்படுபவர்களை மக்கள் நன்று அறிந்துகொள்வார்கள்” என்று யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.