மகா சிவராத்திரி நாளில் இந்த நான்கு கால பூஜைகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

மகா சிவராத்திரி மகிமை தரக்கூடிய நாள். அத்தகையாக சிறப்பான நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மனிதர்கள் மட்டுமல்ல பிரம்மா, விஷ்ணு முப்பத்து முக்கோடி தேவர்களும் விரதம் இருந்து அனுஷ்டித்து நான்கு கால பூஜைகளில் பங்கேற்று அபிஷேகம் செய்கின்றனர்.

இந்த நாளின் சிறப்புகளை ஒரே வார்த்தையில் சொல்லி விட முடியாது. இந்த நான்கு கால பூஜைகளை தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும், மூன்று பிறவிகளிலும் செய்த பாவங்கள் நீங்கும், செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

அன்னை உமையாளுக்காக சரீரத்திலும் பாதி தந்து பற்றற்ற நிலையில் இருக்கும் எம் பெருமான் அர்த்தனாதீஸ்வரராக ஆனது இந்த நாளில்தான். அர்ஜூனன் தனது தவத்தால் பாசுபதம் என்னும் அஸ்திரத்தை பெற்றது. கண்ணப்ப நாயனார் என்னும் அன்புக்குரிய வேடன் சிவகதி என்னும் முக்தி அடைந்தது இந்த நாளில்தான்.

பகீரதன் தவப்பலன் கங்கையை பாரிக்கு தந்தது இந்த நாளில்தான். பதினாறு வயதுடைய மார்க்கண்டேயனுக்காக பாச கயிற்றை பஷ்பமாகியது இந்த நாளில்தான். இத்தகைய சிறப்பு வாய்ந்த மகா சிவராத்திரி நாளில்தான் அப்பன் ஈசனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படுகிறது.

ஒவ்வொரு ஜாமத்தின் போதும் வெவ்வேறு விதமான அபிஷேகம்கள், அர்ச்சனைகள், ஆராதனைகள் செய்யப்படும். விடிய விடிய நடைபெறும் இந்த அபிஷேக ஆராதனைகளை காண கண் கோடி வேண்டும்.

பிரம்மன் செய்யும் பூஜை
முதல் கால பூஜை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். இது ஜோதி சொரூபமான ஈசனின் தலைப்பகுதியை தேடி அன்னப்பறவையாய் மாறிய நான்முகன் பிரம்மன் எம்பெருமான் ஈசனுக்கு செய்யும் பூஜையாகும்.

மும்மூர்த்திகள் முதல் முப்பது முக்கோடி தேவர்களும் ரிஷிகள் யாவரும் உறையும் கோமாதா எனும் பசுவின் மூலம் பெறப்படும் பொருட்களால் செய்யப்படும் பூஜை இதுவே. இந்த கால பூஜையில் பஞ்ச கவ்வியம் எனப்படும் பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம் அபிஷேகம் செய்ய வேண்டும். சந்தனம் பூசி மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்து வில்வ அர்ச்சனை செய்து தாமரைப்பூவினால் அர்ச்சனை செய்து வழிபடுவார்கள்.

நைவேத்தியமாக பாசிப்பருப்பு பொங்கல் படைப்பார்கள். ரிக்வேதமும், சிவபுராணமும் பாராயணம் செய்வார்கள். நெய் தீபம் காட்டி முதல் கால பூஜை செய்வார்கள். இந்த பூஜையை தரிசனம் செய்பவர்களின் பிறவிப்பிணி நீங்கும்.

மகாவிஷ்ணு செய்யும் பூஜை
இரண்டாம் ஜாம பூஜை இரவு 9 – நள்ளிரவு 12 மணி வரைக்கும் நடைபெறும். அக்னியாய் ஒளிர்ந்த சிவபெருமானின் திருவடியை தேடி சென்ற மகாவிஷ்ணு ஈசனுக்கு செய்யும் பூஜை இரண்டாம் ஜாம பூஜை. இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படும்.

பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து இறைவனை அலங்கரிப்பார்கள். வெண்பட்டினால் ஆடை அணிவிப்பார்கள். இந் நேரத்தில் வில்வம், தாமரைப்பூ, துளசியினால் அர்ச்சனை செய்வார்கள். இனிப்பு பாயாசம் நைவேத்தியம் செய்வார்கள். நல்லெண்ணெய் தீபத்துடன் பூஜை செய்வார்கள்.

யஜூர்வேதம் பாராயணம் செய்வார்கள். எட்டாம் திருமுறையில் கீர்த்தி திருவகவல் பாராயணம் செய்யப்படும். இந்த பூஜையில் பங்கேற்று இறைவனை தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும் செல்வம் பெருகும். சிவ அருளுடன் திருமாலின் அருளும் கிடைக்கும்.

அம்பாள் செய்யும் பூஜை
மூன்றாவது கால பூஜை நள்ளிரவு 12 – அதிகாலை 3 மணி வரை நடைபெறும். மூன்றாம் ஜாம பூஜை காலத்தினை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம்.

அப்பன் ஈசனுக்கு அம்பாள் பார்வதி மன மகிழ்ச்சியோடு செய்யும் பூஜைதான் மூன்றாம் கால பூஜை. தேன் அபிஷேகம் செய்து பச்சைக்கற்பூரம் சாற்றுவார்கள். மல்லிகை, வில்வ இலைகளால் அலங்காரம் செய்து சிவப்பு வஸ்திரம் அணிவிப்பார்கள்.

எள் சாதம் நிவேதனமாக படைத்து நெய் தீபம் ஏற்றுவார்கள். சாம வேதம் எட்டாம் திருமுறையில் திருவண்டகப்பகுதி பாராயணம் செய்வார்கள். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்கும் சிவ சக்தியின் அருள் கிடைக்கும்.

முப்பத்து முக்கோடி தேவர்கள் செய்யும் பூஜை
நான்காவது கால பூஜை மறுநாள் அதிகாலை 3 மணி காலை 6 மணிவரைக்கும் நடைபெறும். நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். இந்த காலத்தில் குங்குமப்பூ சாற்றி கரும்பு சாறு, பால் அபிஷேகம் செய்வார்கள்.

பச்சை அல்லது நீல வண்ண வஸ்திரம் சாற்றுவார்கள். நந்தியாவட்டை பூக்கள், அல்லி, நீலோற்பவ மலர்களால் அர்ச்சனை செய்வார்கள். சுத்தம் நைவேத்தியம் படைப்பார்கள். அதர்வண வேதம், எட்டாம் திருமுறையில் போற்றி திருவகவல் பாராயணம் செய்வார்கள். தூப தீப ஆராதனை செய்து வழிபடுவார்கள்.