யாழ்ப்பாண கிராம சேவையாளர்களிடம் பண மோசடி

நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உள்பட்ட கிராம சேவையாளர்களை அலைபேசியில் தொடர்பு கொண்ட மோசடி நபர்கள் 14 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.

இன்றைய தினம் யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவையாளர்கள் பலருக்குஅலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் தாம் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் என அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் அவர்கள், உங்கள் கிராம சேவையாளர் பிரிவுகளில் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் உங்கள் கிராமத்திற்கு வரவுள்ளதாக தெரிவித்ததுடன் , அதற்கான செலவீன பணத்தினை “ஈசி காஸ்” மூலம் அனுப்புமாறு கூறியுள்ளனர்.

இதனை நம்பிய ஒரு கிராம சேவையாளர் 14ஆயிரம் ரூபாயும் மற்றுமொருவர் 25 ஆயிரம் ரூபாய் பணத்தினை “ஈசி காஸ்” மூலம் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் சந்தேகம் ஏற்பட்டதால் ஏனைய கிராம சேவையாளர்கள் சுதாகரித்து கொண்டு தாம் ஏமாறாமல் தப்பிக்கொண்டதாகவும் தெரியவருகின்றது.

இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கபட்ட கிராம சேவையாளர்கள் முறைப்பாடு பதிவு செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.