பெண் முன்னாள் போராளிக்கு உடல் முழுவதும் சிகரெட் சூடு! நெஞ்சை நெருடுகின்ற உண்மைச் சம்பவங்கள்

தமிழ் மக்களுக்கு உதவி வழங்கும் நிறுவனம் என்று யாழ் எயிட் என்ற பெயரில் இயங்கும் ஒரு குழுவின் முகப்புத்தகத்தில் இருந்த பதிவு வீடியோவுடன் இங்கு தந்துள்ளோம்.

நெஞ்சை நெருடுகின்ற உண்மைச் சம்பவங்கள்….

நேற்று நண்பர் ஒருவரின் வேண்டுகோளின் அடிப்படையில் மல்லிகைத்தீவு பிரதேசத்திற்கு சென்று இருந்தோம். இரண்டு வயதில் தாய் தந்தை யார் என்றே தெரியாத நிலையில் செஞ்சோலையில் விடப்பட்டு அங்கேயே வளர்ந்து 16 வயதளவில் காவல் துறை போராளியாகி மன்னார் களமுனையில் களமாடி கடும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, போர் முடிவுற்ற நிலையில் தடுப்பிதற்கு சென்றுள்ளார்.

அங்கு விசாரணைக்கு என அடிக்கடி அழைக்கப்பட்டமையால், அங்கே இருந்த ஒருவரை பாதுகாப்புக்காக அவசரமாக திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்த பிற்பாடே அவரின் உண்மை முகம் தெரிந்தது. கடும் சொற்களால் வதைத்ததோடு மாத்திரமல்லாமல் சிகரெட், பீடி போன்ற பலவற்றால் உடல் முழுவதும் சூடும் வைத்துள்ளார்.

இதை விட அவர் போதைக்கும் அடிமை. இதனால் கணவனைப் பிரிந்து மூன்று பிள்ளைகளுடன் காடுகள் சூழ்ந்த பிரதேசத்தில் ஒரு பகுதி இராணுவ முகாமை எல்லையாக கொண்ட வீட்டில் வாழ்கிறார்.

இதேவேளை பாதுகாப்பு மற்றும் வறுமை காரணமாக இரண்டு பிள்ளைகளை சிறுவர் இல்லத்தில் இணைத்து தற்போது ஒரு மகளுடன் வசிக்கின்றார். கணவன் எங்கே என்றே தெரியாதாம்.

பொலீஸாரிடம் முறையிட்ட போது கணவன் எங்கு இருக்கிறார் என்று பார்த்து சொல்லட்டாம் தாங்கள் பிடித்து வழக்கு பதிவு செய்கிறோம் என்கிறார்களாம். வறுமையால் இரண்டு தடவைகள் தற்கொலைக்கும் முயற்சி செய்து இருக்கிறார்.

தொழிலும் செய்யமுடியாது வெயிலில் நின்றால் மூக்காலும் வாயாலும் இரத்தம் வருமாம். புலம் பெயர்ந்த நல்லுள்ளம் படைத்த ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு குழாய் கிணறும் மின்சார வசதியும் செய்து உதவியுள்ளார்கள்.

அதைவிட உதவிகள் கிடைக்க வில்லை என்கிறார். பிள்ளைகளையும் என்னோடு கொண்டு வந்து வளர்க்க தான் விருப்பம் பிள்ளைகளும் கூட்டிக் கொண்டு போங்கள் என கேட்டு அழுகிறவை தான். ஆனால் என்ன செய்வது வீடும் பாதுகாப்பும் இல்லை, வளர்க்கவும் வசதி இல்லை எனக் கூறினார்.

சரி இன்று என்ன சாப்பிட்டீங்க என்ற போது வீட்டில சாப்பாடு செய்ய ஒன்றும் இல்லை கொஞ்ச அரிசி இருந்தது கஞ்சியாக காய்ச்சி முருக்கம் இலைபோட்டு குடித்தோம் என்கிறார்.

இப்படி தான் சிலர் வாழ்கிறார்கள் நாம் தான் எத்தனை பேருக்கு உதவும்.???

ஆனாலும் யாழ் எய்ட் உடன் தொடர்ந்து பயணிக்கும் யாழ் இந்துவின் கா.பொ.த உ / த 95ம் ஆண்டு மாணவனும் லண்டன் வாழ் புலம்பெயர் ஈழத்தமிழரும் சமூக சேவையாளரும் மனிதாபிமான உதவிகள் பலவற்றை யாழ் எய்ட் ஊடாக வழங்கி வருபவருமான திரு குருபரன் (குரு ) உடனடியாகவே மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட நிதியில் வீட்டை சுற்றி கொங்கிறீட் தூண் நட்டு முட்கம்பி வேலி அமைப்பதற்கும் நல்லிண பசுவை கன்றுடன் வழங்கவும் இரண்டு மாதங்களுக்கு மேல் பயன்படுத்த கூடிய உலர் உணவு பொருட்களை வழங்கவும் முன் வந்து அதற்கான பணிகளை யாழ் எய்ட் ஊடாக ஆரம்பித்து, விரைவில் சிறுவர் இல்லத்தில் இருக்கும் பிள்ளைகளை தாயாருடன் சேர்த்து மகிழ்ந்திருக்கவும் வழிவகைகளை மேற்கொண்டுள்ளார்.