தேசியப் பாடசாலைகளுக்கு அதிபர் நியமனம்- யாழ்.இந்துவின் அதிபர் நிரந்தரமாக்கப்பட்டார்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் இரட்ணம் செந்தில்மாறன், அந்தப் பதவியில் நிரந்தரமாக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பதில் அதிபராகக் கடமையாற்றிய ச. நிமலன், கடந்த வருடம் மாணவர் அனுமதிக்கு கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவர் பிணையில் விடுவிக்கப்பட்ட போதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள இடம்பெறுகின்றன.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பதில் அதிபராக கல்வி அமைச்சில் உதவிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த இ. செந்தில்மாறன் நியமிக்கப்பட்டிருந்தார்.

தற்போது, கல்வி நிர்வாக சேவை அலுவலராகக் கடமையாற்றுபவர்களில், திறமை அடிப்படையில், நேர்முகத் தேர்வின் மூலம் பொதுச் சேவை ஆணைக் குழுவினால் தேசியப் பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்தின் கீழேயே யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பதில் அதிபர் இ. செந்தில்மாறன் நிரந்தர அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பிரதி அதிபராகக் கடமையாற்றிய திருமதி லலிதா இரவீந்திரன் கொழும்பு இராமநாதன் மகளீர் கல்லூரியின் அதிபராக பொதுச்சேவை ஆணைக்குழுவின் முடிவுக்கு அமைய கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பாடசாலை அதிபர் நியமனத்தின் ஒரு கட்டமாக சாவகச்சேரி இந்துக்கல்லூரி அதிபராக சர்வேஸ்வரனும் நெல்லியடி மத்திய கல்லூரி அதிபராக கிருஸ்ணகுமாரும் கல்வியமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஏற்கனவே அந்தப் பாடசாலைகளின் அதிபர்களாக கடமையாற்றி வந்தபோதிலும் கல்வியமைச்சின் முறைப்படியான நேர்முகப்பரீட்சையின் பின் தற்போது நிரந்த அதிபர்களாக்கப்பட்டுள்ளனர்.