“ராஜபக்ச குடும்ப ஆட்சியின் பலவீனத்தன்மை 100 நாட்களுக்குள் வெளிப்பட்டுள்ளது. இந்தநிலையில், அடிப்படைவாதம், இனவாதம் அற்ற விதத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பலமான கூட்டணியை ஸ்தாபித்துள்ளோம்.
இந்தக் கூட்டணியின் ஊடாக சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியினர் போட்டியிட்டு பலமான அரசை நிச்சயம் அமைப்பார்கள்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் புதிய கூட்டணியில் போட்டியிடாமல் தனித்து ‘யானை’ சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தச் செய்திகள் தவறானவை.
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுதவின் தீர்மானத்துக்கும் கட்சிக் கொள்கைக்கும் முரணான வகையில் எவரும் செயற்படக்கூடாது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு புதிய கூட்டணியின் தலைவர் பதவியும், வேட்புமனுத் தாக்கல் குழுவின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டுள்ளன. பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடும் அனுமதியும். அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியில் தற்போது உறுப்பினர்களாக் உள்ளவர்கள் சஜித் பிரேமதாஸ தலைமையில் புதிய கூட்டணியின் ஊடாகவே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார்கள்.
ராஜபக்ச அரசின் சதி வலைக்குள் நாம் எவரும் சிக்கமாட்டோம். சஜித் தலைமையில் பலமான அரசை நிச்சயம் அமைப்போம்” – என்றார்.






