எந்த வாக்குறுதிகளையும் கோட்டாபய அரசு நிறைவேற்றாது! மக்களின் எதிர்பார்ப்பில் போடப்பட்டது குண்டு

தமது ஆட்சிகாலம் முடியும் வரை மக்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கமாகவே தற்போதைய அரசாங்கம் விளங்கப்போகின்றது என்பது உறுதியாகியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன சமகால அரசாங்கத்தின் செயல்பாடுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.

இது தொடர்பில் பேசிய அவர்,

“அரசாங்கம் அதன் ஆட்சிகாலம் முடியும் வரை மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாது என்பது அதன் தற்போதைய செயற்பாடுகளின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போதைய அரசாங்கம் தமது அடக்குமுறை ஆட்சியை வெளிப்படுத்தி வருகிறது.

ஆர்பாட்டகாரர்கள் மற்றும் சூரியவெவ விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற விளையாட்டை பார்வையிடசென்றவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்களை மேற்கொண்டமையை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமது ஆட்சிகாலம் முடியும் வரை மக்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கமாகவே தற்போதைய அரசாங்கம் விளங்கப்போகின்றது என்பது உறுதியாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின் போது தமது வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிப் பெற்றதை அடுத்து மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதாக குறிப்பிட்ட அரசாங்க தரப்பினர் தற்போது நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக தெரிவித்து வருகின்றனர்.

அரசாங்கத்தின் போக்கை பார்க்கையில் நாடாளுமன்ற தேர்தலை அடுத்து மாகாணசபை தேர்தல் என்றும் பின்னர் பிரேதசசபை தேர்தல் என்றும் கூறிக்கொண்டு தமது வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாது காலங்கடத்துவதற்கான வாய்ப்பும் இருக்கின்றது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாங்கமென்றால் தாம் ஆட்சிக்கு வந்து 102 நாட்கள் கடந்துள்ள நிலையில் ஒரு வாக்குறுதியையேனும் நிறைவேற்றிருக்கும் அல்லவா.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்த காலக்கட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட அதே ஆட்சி முறைதான் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்களின் ஆர்பாட்டத்தின் போது ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டோரை பொலிஸார் தாக்கியிருந்தனர்.

சாதாரணமாக பெண் குற்றவாளியொருவரை ஆண் பொலிஸாரால் கைது செய்யக்கூட அனுமதி இல்லாத நிலையில் , ஆண் பொலிஸார்கள் பெண்களை தாக்கியிருந்தனர்.

இதேவேளை சூரியவௌ விளையாட்டறங்கில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டிகளை பார்வையிடுவதற்காக சென்ற எம்நாட்டு ரசிகர்கள் பலர் நேற்று தாக்கப்பட்டிருந்தனர்.

தேசிய அபிமானத்துடன் தமது கைகளில் தேசிய கொடிகளை ஏந்திய வண்ணம் சென்றவர்களை விரட்டி தாக்கியமையை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட அவப் பெயரை யாராவது பொறுப் பேற்றக வேண்டும். இவ்வாறு யார் மீதும் தாக்குதல்களை மேற்கொள்ள யாருக்கும் உரிமையில்லை.

அதேவேளை இராணுவ ஆட்சி முறை நாட்டுக்கு தேவையில்லை. தற்போது இடம்பெற்றுவரும் தாக்குதல்கள் சமூகத்திற்கு தவறான எண்ணங்களை போதிக்க கூடிய வாய்ப்பு இருக்கின்றது. இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்” என்றார்.