வலம்புரி பத்திரிகை பணிமனையில் என்ன நடந்தது? எழுவைதீவு மக்களின் நியாயத்தை மூடி மறைத்த ஊடகங்கள்

எழுவைதீவில் மதப்பிரிவினை ஏற்படுத்தும் வகையில் வலம்புரி பத்திரிகையில் பத்தி ஒன்று எழுதப்பட்ட நிலையில் அதுதொடர்பில் தவறான தகவலை யார் வழங்கினார்கள் என்பதை அறிய அந்தத் தீவினைச் சேர்ந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வயோதிபர், இளைஞர்கள் பத்திரிகைப் பணிமனைக்கு கடந்த வியாழக்கிழமை சென்றிருந்தனர்.

அப்போது எழுவைதீவைச் சேர்ந்தோர், தமது ஊர் தொடர்பில் தவறான தகவலை வழங்கியோர் யார் என்பதை வெளிப்படுத்தும் வரை தாம் செல்லமாட்டோம் என உறுதியாக இருந்துள்ளனர். அவர்களை வலம்புரி பணியாளர் ஒருவர் சமாளித்துக் கொண்டிருந்த வேளை, அலுவலகத்துக்கு வருகை தந்த ஆசிரியர், எழுவைத்தீவைச் சேர்ந்தவர்களை டேவிட் பாதரே அனுப்பிவைத்தார் என்று கோபாவேசத்தோடு பழி சுமத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் வந்திருந்தோர் மீது தலைக்கவசத்தால் தாக்க முற்படுவதும் காணொலியில் பதிவாகியுள்ளது.

இவ்வாறு நடந்தவற்றை முற்றாக மூடி மறைத்த வலம்புரிப் பத்திரிகை மறுநாள் தனது பிரேத்தியேக செய்தி போன்று தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது. அதில் அடாவடியில் ஈடுபட்டோர் தொடர்பான படங்கள் உள்ளபோதும் அவற்றை வெளியிடவில்லை என்றும் பீற்றியிருந்தது.

வலம்புரி பத்திரிகையில் இடம்பெற்றது தொடர்பில் முதல்வன் ஒரு வாரமாக ஆராய்ந்து வந்தான். பத்திரிகைப் பணிமணைக்குச் சென்றிருந்தோர் தமது பக்க நியாயங்களை ஏனைய இரண்டு உள்ளூர் பத்திரிகைகள் உள்பட ஊடகங்களுக்கு அனுப்பிவைத்தனர். எனினும் உள்ளூர் பத்திரிகைகள்கூட அந்த மக்களின் நியாயத்தை வெளிப்படுத்த முன்வரவில்லை.

இந்த நிலையிலேயே மக்கள் ஊடகம் என்ற வகையில் முதல்வன் எழுவைதீவு மக்களின் நியாயத்தை இங்கு வெளியிடுகிறான். அத்தோடு அன்றைய தினம் அங்கு இடம்பெற்றவை தொடர்பில் சில நிமிடங்கள் காணொலிப் பதிவையும் முதல்வன் இங்கு வெளியிட்டுள்ளான்.

இந்தச் சம்பவத்தை ஆராயாமல் மக்களின் நியாயங்களை கேட்டறியாமல் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் போன்றோரும்தமிழ் அரசுக் கட்சி, புளொட், தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற கட்சிகளும் ஊடக அடக்குமுறை என கண்டன அறிக்கையும் வெளியிட்டிருந்தனர்.

வலம்புரிப் பத்திரிகை இந்த விடயத்தில் தனது பக்க நியாயத்தை மட்டும் பிரேத்தியேக செய்தியாக வெளியிட்ட நிலையில் முதல்வன், இந்தப் பகுதியில் பத்திரிகையின் நியாயத்தை வெளிப்படுத்தவேண்டிய தேவையற்றதாகக் கருதுகின்றான். (ஆ-ர்)

“குரலற்றவர்களின் குரலாக ஊடகங்கள் செயற்படுவோம் என நம்பினோம் வலம்புரி பத்திரிகை எமது குரலை நசுக்கியுள்ளது” – எழுவைதீவு மக்கள் ஆதங்கம்
வலம்புரி பத்திரிகையில் கடந்த 9ஆம் திகதி வெளிவந்த ஆலடி மாநாட்டில், “எழுவைதீவு முருகமூர்த்தி வித்தியாலய மாணவர்களை எழுவைதீவு றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு மாற்றி முருகமூர்த்தியை முடக்கும் செயற்பாட்டை பாதிரியார் ஒருவர் முன்னெடுத்துள்ளார்” என்று உண்மைக்கு மாறான செய்தி ஒன்றை பிரசுரித்திருந்தனர்.

அந்தப் பத்திரிகையில் குறிப்பிட்டது போல் சம்பவம் எதுவும் முருகமூர்த்தி பாடசாலையில் இடம்பெறவில்லை. இவ்வாறன நிலையில் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டு ஒற்றுமையை குழப்ப முனைவதாக இந்து மற்றும் கத்தோலிக்க மக்கள் இணைந்த குழு பத்திரிகை அலுவலகத்துக்கு கடந்த 20ஆம் திகதி சென்று செய்தி தொடர்பில் வினாவினோம்.

நாம் மிக அமைதியான முறையில் பத்திரிகை அலுவலகத்தில் ஒருவருடன் இந்த செய்தியில் உள்ள தகவல் பிழை, இந்த தகவலை தந்தவரை அடையாளம் காட்ட முடியுமா ? அல்லது இதனை எழுதியவர் இதன் உண்மை தன்மையை ஆராய்ந்தா எழுதினர் ? என வினாவினோம். அதற்கு அவர் பத்திரிகையில் வெளிவந்த செய்தியில் ஏதேனும் தவறு இருந்தால் பத்திரிக்கை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யுங்கள். அவர்கள் எமக்கு விளக்கம் கேட்டால் அவர்களுக்கு விளக்கம் கொடுப்போம் என பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்தார்.

அதற்கு நாம் எங்கள் ஊரை பற்றியும் ஒற்றுமையாக வாழும் இந்து, கிறிஸ்தவ மதத்தினரிடையே தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குவது போன்றுள்ளது. அதற்கு நீங்கள்தான் பொறுப்பு கூற வேண்டும் என கூறினோம். அதற்கு அவர்கள் தாம் பொறுப்பு கூற முடியாது. செய்தியில் தவறு இருந்தால் பத்திரிக்கை முறைப்பாட்டு ஆணைக்குழுவிற்கு செல்லுங்கள் என கூறினார்கள்.

அதற்கு மேல் அவர்களுடன் கதைத்து பயனில்லை என கருதி நாம் அலுவலகத்தை விட்டு வெளியேறிய சமயம் அங்கே வந்த நபர் ஒருவர் ” என்ன பிரச்சனை …” என உரக்க கேட்ட வாறு எம் மத்தியில் வந்து கையில் இருந்த தனது தலைக்கவசத்தை மேசையில் ஓங்கி அடித்து உரத்த குரலில் கத்தத் தொடங்கினார். பின்னரே நாம் அறிந்து கொண்டோம் அவரே அந்த பத்திரிக்கை பிரதம ஆசிரியர் விஜயசுந்தரம் என, அவரே ஆலடி மாநாட்டை எழுதுபவர் எனவும்.

அவர் எம் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். எம்மை ஒருமையில் விழித்து பேசி அங்கிருந்தவர்களின் கோவத்தை தூண்டும் முகமாக செயற்பட்டார். ஒரு கட்டத்தில் தனது தலைக்கவசத்தால் எம்மை தாக்க கூட முனைந்தார். அப்போதும் கூட நாம் அமைதியாகவே இருந்தோம்.

நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு என மிரட்டும் தொனியில் “எத்தனை பேர் இதற்குள் இந்து ? ” , “அவர்களை வர சொல்லு ” என உரத்து கத்தினார். இதனால் எம்முடன் வந்த சிலரும் உணர்ச்சி வசப்பட்டு , அவர்களும் உரத்த குரலில் வாக்கு வாதப்பட்டனர்.

அப்போது அவர் ‘இவர்கள் இங்கே சும்மா வரவில்லை. வலம்புரியை அடித்து நொறுக்கவே வந்துள்ளார்கள். இராணுவத்தினரும் , அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் வேறு நபர்களும் சேர்ந்து உங்களை இங்கு அனுப்பி வலம்புரியை அடித்து நொறுக்க சொல்லி இருக்கிறார்கள். என எம் மீது அபாண்டமாக குற்றம் சாட்டி பொலிஸை கூப்பிடு என உரத்து கத்திக்கொண்டு இருந்தார்.

இதனால் நிலமை மோசமடைவதை உணர்ந்து நாம் பத்திரிகை அலுவலகத்தைவிட்டு வெளியேற முயற்சித்தோம். அப்போது அவர் தனியே அலுவலக வாயிலில் நின்று எம்மை வெளியே செல்ல விடாது தடுத்து எம்முடம் தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அலுவலகத்தில் இருந்த ஏனையவர்கள் எவரும் எம்முடன் வாக்கு வாதத்தில் ஈடுபடாத போதும் இவரே எம்முடன் தொடர்ந்து எமது கோவத்தை தூண்டும் விதமாக செயற்பட்டார். இதுவே அங்கு நடந்தது.
தவிர, நாம் தாக்குதலை நடத்தும் நோக்கில் அங்கு செல்லவில்லை. தாக்குதல் நடத்தும் நோக்கம் இருந்திருந்தால் ஆயுதங்களுடன் சென்றிருப்போம். ஆனால் நாம் அவ்வாறு செய்யவில்லை. அங்கு நாம் எவ்வாறு நடந்து கொண்டோம் என்பது அவர்களது சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இதன்போது அங்கு வந்த பொலிஸார் எம்மை விசாரித்தனர். நாம் தாக்குதல் நடத்தும் விதமாக செயற்பட்டிருந்தால் உடனடியாக எம்மை பொலிஸார் கைது செய்திருப்பார்கள். ஆனால் அப்படி எதுவும் இடம்பெறவில்லை. அங்கு ஆளுநரின் ஊடகச் செயலாளரும் வருகைந்து சம்பவத்தை ஆராய்ந்தார். இதன்போது அவர் நடந்ததை புரிந்து கொண்டார்.

அந்தப் பத்திரிகை அலுவலகத்தில் நடந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் எமது நியாயத்தை அறியாமல், அலுவலகத்தில் என்ன நடந்தது என்ற இரு தரப்பு நியாயங்களை ஆராயாமல் கண்டனம் வெளியிடுவதால் கவலையடைகிறோம்.

குரலற்றவர்களின் குரலாக ஊடகங்கள் செயற்படுவோம் என நாங்கள் நம்பினோம். ஆனால் வலம்புரி பத்திரிகை எமது குரலை நசுக்கி உள்ளது. எமது தரப்பு குரலை கண்டன அறிக்கை விட்ட எவரும் கேட்கவில்லை. கண்டன அறிக்கை விட்ட பலருக்கு எழுவை தீவுக்கு ஒரு தடவையேனும் வந்தார்களோ தெரியவில்லை. இங்குள்ள பிரச்சினைகள் எதுவும் தெரியாமலே அவர்கள் கண்டன அறிக்கைகளை விடுகின்றார்கள். அது எமக்கு மிகுந்த கவலையை தந்துள்ளது – என்றனர்.

பாடசாலை விவகாரம் குறித்து அவர் தெரிவித்ததாவது:

எழுவைதீவு றோமன் கத்தோலிக்க பாடசாலையில் தரம் ஐந்து வரையிலும், எழுவைதீவு முருகமூர்த்தி வித்தியாலயத்தில் உயர்தரம் வரையிலும் கற்பிக்கப்படுகின்றது. முருகமூர்த்தி வித்தியாலயத்தில் மொத்தம் 89 பிள்ளைகள் கல்வி பயில்கின்றனர். ஐந்தாம் தரம் வரையில் 21 பிள்ளைகளுமே உள்ளனர். இவ்வாறான நிலையில் இரு பாடசாலைகளுக்கும் ஆசிரியர் பற்றாக்குறை காணப்பட்டது.

இதனால் கோட்டக்கல்வி பணிப்பாளர் மற்றும் தீவக வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோர் இரு பாடசாலைகளின் மாணவர்களது பெற்றோர்களுடனும் கலந்துரையாடினர். இந்தக் கலந்துரையாடலின் போது, ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் முருகமூர்த்தி வித்தியாலயத்தில் ஆறாம் தரம் முதல் உயர்தரம் வரையில் கற்பிப்பது என்றும், அங்கு ஐந்தாம் தரம் வரையில் பயிலும் மாணவர்களை றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு மாற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது – எனத் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கையில் எந்தவொரு பாதிரியார்களும் தொடர்புபடவில்லை. பெற்றோரது விருப்பத்துடன் கல்வியை முன்னேற்ற எடுத்த நடவடிக்கையை ஆராயாமல் திரிபுபடுத்தியுள்ளனர். இதனை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இவற்றை கூட புரிந்து கொள்ளாது பத்திரிகையின் செய்தியை நம்பி எமக்கு எதிராக பலரும் கண்டன அறிக்கைகளை விடுப்பது எமக்கு மிகுந்த கவலை அளிக்கின்றது – என தெரிவித்தனர்.

– முதல்வன் –