வடக்கு முழுவதும் கைக்குண்டுகள், வாள்களைக் காட்டி கொள்ளை மற்றும் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்ட கும்பல் யாழ்ப்பாணத்தில் சிக்கியது

யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணம் முழுவதும் வீடுகளுக்குள் புகுந்து கைக்குண்டுகள் மற்றும் வாள்களைக் காட்டி கொள்ளையிடுவது, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த நால்வர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

“சந்தேகநபர்களிடமிருந்து 2 கைக்குண்டுகள், 2 வாள்கள், கொள்ளையிடபட்ட நகைகள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் கும்பலைச் சேர்ந்த மேலும் பலர் வடக்கு மாகாணம் முழுவதிலும் பதுங்கியுள்ளனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“அச்சுவேலியில் கொள்ளைக் கும்பல் ஒன்று பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.எஸ். சேனாதீரவின் உத்தரவில் சிறப்பு பொலிஸ் பிரிவு விசாரணைகளை முடுக்கிவிட்டது.

அதனைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய தேடுதல் மற்றும் விசாரணையில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 கைக்குண்டுகள், 2 வாள்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.

இந்தக் கும்பல் சாவகச்சேரி, சுன்னாகம், அச்சுவேலி, கோப்பாய் மற்றும் மன்னார் பொலிஸ் பிரிவுகளில் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி நகைகளைக் கொள்ளையிட்டுள்ளது. மேலும் பெண்கள் உள்ள வீடுகளில் பாலியல் துன்புறுத்தல்களையும் இந்தக் கும்பல் செய்துள்ளது.