ஒரு லட்சம் வேலைவாய்ப்பு…இளைஞர்களிடம் எழுந்துள்ள சந்தேகம்?

நாடு முழுவதும் ஒரு லட்சம் வேலை வாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள் நடைபெற்று வருகின்ற நிலையில் சமூக வலைத்தளவாசி ஒருவர் பதிவிட்டுள்ள தகவல் இது,

நேர்முகத் தேர்வினை நடத்துவதற்காக முப்படையினரும் கிராம அலுவலரும் தேவையான உத்தியோகத்தர்களும் இணைந்த குழுவொன்றை அமைத்து கொள்ளுமாறு பணிக்கப்பட்டதன் அடிப்படையில் இராணுவத்தினர் பங்கு கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இராணுவத்தினர் நேர்முகத் தேர்வு நடாத்தியமையால் கலந்து கொண்ட பலர் அச்சத்தோடு சென்றதை அவதானிக்க முடிந்தது. ஏற்கனவே சிவில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இராணுவத்தினர் சிவில் நடவடிக்கை மேற்கொள்ள கூடிய வகையில் வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து பிரிவு போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு வனவள பிரிவு போன்றவை தற்போது இராணுவத்திடமும் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு ஒரு இராணுவ ஆட்சி மயமாக்கலை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்பது தெளிவாகின்றது..

இப்பொழுது வேலைவாய்ப்பு என்ற பெயரில் என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்ற கேள்வி பலரிடம் காணப்படுகின்றது.

6 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில் வழங்கப்படும் பயிற்சி ஆயுதப்பயிற்சியா? அல்லது சீருடை அணியவேண்டி வருமா என்றெல்லாம் இளைஞர்கள் சந்தேகம் வெளியிட்டதை காணக்கூடியதாக இருந்தது..

இவர்களது வேலை என்ன.. இவர்களை வைத்து என்ன செய்ய போகின்றார்கள்.. என்பது பற்றி உறுதியாக கூறமுடியாதுள்ளது.

எனது சந்தேகம் என்னவென்றால் இந்த நியமனங்கள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் வழங்கப்படலாம் அல்லது பல்நோக்கு அபிவிருத்தி படையணி (Multi task force) என்னும் பெயரில் முப்படைத்தளபதியான ஜனாதிபதியின் கீழ் இராணுவத்தின் ஒரு பிரிவாக புதிய படையணி ஒன்று உருவாக்கப்படலாம்.

வேலைவாய்ப்புகள் மக்களுக்கு நல்ல விடயமாக இருந்தாலும் இதன் பின்னணியில் பல முடிச்சுக்கள் இருப்பதாகவே எனக்கு தோன்றுகின்றது.

அது என்னவென்றால்…

1)இந்த வேலைவாய்ப்புகள் தேர்தலுக்கான வாக்கு வேட்டையை மையப்படுத்திய ஒரு செயற்பாடே. 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் எனின் நியமனம் வழங்கப்படும் வரை அவர்களும் அவர்களது குடும்பமும் வேலைக்காக அரசின் கட்சிக்கு வாக்களிக்கும். மார்ச் மாதம் 3 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதும் பாராளுமன்ற அரசாங்கம் இல்லாத நிலையில் இவர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்க முடியாது..

2) வேலையை பெற்றுக்கொள்வோர் அனைத்து திணைக்களங்களிலும் உத்தியோகத்தர்களுக்கு உதவியாளர்களாகவே நியமிக்கப்பட உள்ளனர். இராணுவத்தின் கீழான நியமனங்கள் என்பதால் சம்பளம் இராணுவம் அல்லது சிவில் பாதுகாப்பு படையணி தான் வழக்கும்..

3) வேலையை பெற்றுக்கொள்வோர் அனைவரும் இராணுவ புலனாய்வாளர்களாகவும் செயற்படுவார்கள். இதன் மூலம் அனைத்து திணைக்களங்களிலும் அரச சேவை ஊழல்கள் அதிகார துஸ்பிரயோகங்கள் என்பனவற்றை கட்டுப்படுத்த முடியும்..

4) வேலையை பெற்றுக்கொள்வோர் மக்களுக்குள் வாழ்வதால் மக்கள் மத்தியிலும் நாட்டுக்கும் சமூகத்திற்கும் ஒவ்வாத செயற்பாடுகள் இடம் பெற்றால் இந்த புலனாய்வாளர்களை கொண்டே உடனுக்குடன் தகவலறிந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

5) தரம் 10 11 படித்தோர் உள்வாங்கப்டுவதால் வேலையற்று திரியும் இளைஞர்களுக்கு இது அரச வேலைவாய்ப்பாக அமைவதோடு இளைஞர் யுவதிகள் தவறான பாதையில் செல்வதை கட்டுப்படுத்துவதன் ஊடாக நாட்டில் இடம்பெறும் குற்ற செயல்களை குறைக்க முடியும்.

ஆக மொத்தத்தில் இந்த வேலைவாய்ப்புக்களால் மக்களை ஒரு சிவில் இராணுவ கட்டமைப்பின் கீழ் வைத்திருக்க முடியும் என அரசு கருதுகிறது. இதன் மூலம் ஊழல்கள் குற்றங்களை மாத்திரமல்ல. பயங்கரவாத செயற்பாடுகளையும் மாற்று சிந்தனைகளையும் கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறது கோட்டா அரசு.

நடைபெறும் தேர்தலில் பாராளுமன்ற அரசை கோட்டா அரசின் கட்சி கைப்பற்றினால் மாத்திரமே இது சாத்தியமாகும்..

பொறுத்திருந்து பார்ப்போம்..