ஐக்கிய தேசியக் கட்சியையும் அதன் முன்னணியையும் உடைத்து வீழ்த்துவதற்கு சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியை தோல்விக்கு உட்படுத்தி பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்கிற முடிவினை ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு முடிவு செய்துள்ளது.
தமது அடையாளம் மற்றும் சம்பிரதாயத்தை பாதுகாப்பு செய்யும் வகையில் யானைச் சின்னத்தை முன்நிறுத்தி போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு எடுத்துள்ள தீர்மானமானது, கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஸ்ரீகொத்தவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெற்ற மத்திய செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதேவேளை, வாத விவாதங்கள் என மூன்று மணிநேரம்வரை சென்றுள்ளது.
யானைச் சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க முன்வைத்த யோசனைக்கு பெரும்பான்மையானவர்கள் ஆதரவை வெளியிட்ட அதேவேளை, சஜித் பிரேமதாஸ, ரஞ்ஜித் மத்தும பண்டார, கபீர் ஹாஸிம், தலதா அத்துகோளார, சுஜீவ சேனசிங்க, சந்திராணி பண்டார ஆகியோரே எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
யானைச் சின்னம் அல்லது அன்னச் சின்னத்தில் பொதுத் தேர்தலை எதிர்கொள்வதாயின், அதற்குப் பதிலாக தேசிய மக்கள் சக்தி கூட்டணியில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என யோசனையை சஜித் பிரேமதாஸ அணியினர் முன்வைக்க, அவர் சார்பிலான ரஞ்ஜித் மத்தும பண்டார, கபீர் ஹாஸிம், தலதா அத்துகோளார, சுஜீவ சேனசிங்க, சந்திராணி பண்டார ஆகியோர் மட்டுமே அதற்கு ஆதரவளித்ததோடு மத்திய செயற்குழுவானது பெரும்பான்மை முடிவாக யானைச் சின்னத்தை தெரிவுசெய்தது.
இதன்போது கருத்து வெளியிட்ட சட்டத்தரணி தயா பெல்பொல, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு சட்டம் பற்றிய தெளிவு ஒன்றை வழங்கினார். நீங்கள் அமைத்திருப்பது அரசியல் கூட்டணியல்ல. அதேபோல நீங்கள் முன்வைத்திருக்கும் இந்த கூட்டணியின் யாப்பானது உண்மையான யாப்பு கிடையாது. நீங்கள் கூறுகின்ற கூட்டணி ஒரு கூட்டணியே கிடையாது.
முன்வைக்கப்பட்டுள்ள கூட்டணியானது அரசியல் கூட்டணிக்கே தகுதியில்லை. அது அரசியல் கட்சியின் யாப்பிற்கு சமமாகும். ஒரு கட்சியின் சின்னத்தைப் பெற்று கூட்டணி அமைத்து அதன் யாப்பை முன்வைப்பதால் அது கூட்டணியின் யாப்பாகாது.
யாப்பிற்கு அவசியமாக விடயங்களும் அவ்வாறே. முன்வைக்கப்பட்டுள்ள மக்கள் சக்தி மற்றும் அதன் யாப்பின் பிரகாரம், கூட்டணி உறுப்புரிமையைப் பெறுவோர் ஐக்கியதேசியக் கட்சியின் யாப்பின் படி கட்சி உறுப்புரிமையை இழப்பார்கள் என்று தெரிவித்தார்.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் அனுமதியின் கீழ் இந்த தீர்மானங்களை தாம் எடுத்ததாக மிகவும் சங்கடத்துடன் சஜித் பிரேமதாஸ இதன்போது கூறியுள்ளார்.
அதனால் தனக்காக யாரும் முன்வராத படியினால் தன்னை அனைவரும் காட்டிக்கொடுத்துவிட்டதாக சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியபோது அவர் தலைமையிலான அணியினர் மௌனமாக இருந்துள்ளனர்.
சஜித் பிரேமதாஸவின் செயற்பாடுகளை விமர்சித்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஐக்கிய சேவைச் சங்கத்தின் ஊடக செயலாளரான சுனில் டி சில்வா மீது தாக்குதல் நடத்த சஜித் பிரேமதாஸ முயற்சித்தபோது, செயற்குழுவிலுள்ள உறுப்பினர்கள் அவரைத் தடுத்துள்ளனர்.
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு மோதலில் ஆரம்பமாகியபோது சஜித் பிரேமதாஸ சார்பாக செயற்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர மற்றும் எரான் விக்ரமரத்ன கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.