நாடாளுமன்றைக் கலைக்கும் வர்த்தமானி வெளியாகியது; காபந்து அமைச்சரவை நீடிக்கும் – எம்.பிக்களின் பதவிக்காலம் நான்கரை ஆண்டுகளில் நிறைவு

8ஆவது நாடாளுமன்றை இன்று மார்ச் 2ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கும் வகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச விடுத்த ஆணையின் அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு 2165/08 என்ற இலக்கமுடைய இந்த அதிசிறப்பு வர்த்தமானி இன்று இரவு 10.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

இதன்மூலம் 8ஆவது நாடாளுமன்றுக்குத் தெரிவாகிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் நான்ரை ஆண்டுகளுடன் நிறைவடைந்தது. எனினும் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அமைச்சரை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் அடங்கலான காபந்து அரசு பொதுத் தேர்தல்வரை நடைமுறையில் இருக்கும்.

9ஆவது நாடாளுமன்றத்தை தெரிவு செய்யும் பொதுத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது. பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி மார்ச் 19ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது.

நாடுமுழுவதும் 21 மில்லியன் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.