பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சமகாலத்தில் வழங்கப்படும் அனைத்து அரச நியமனங்களை நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
பட்டதாரிகளுக்கான நியமனங்களையும், பொது சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதையும் நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் காலம் என்பதால் இவ்வாறான ஆட்சேர்ப்பு நடவடிக்கை ஒரு அரசியல் ஊக்குவிப்பாக இருக்கக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் முடிவுறும் வரை அனைத்து அரச நியமனங்கள் மற்றும் ஆள்சேர்ப்பு நிறுத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த 45 ஆயிரத்து 585 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக, கோட்டாபய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் அதனை நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
தெரிவு செய்யப்பட்ட 45 ஆயிரத்து 585 பட்டதாரிகளுக்கு விரைவு தபாலில் நியமனங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அவற்றை ரத்துச் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரு இலட்சம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. அதற்கமைவாக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







