நியமனக் கடிதம் கிடைக்காத பட்டதாரிகளை அறிவிக்குமாறு அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவிப்பு

பட்டதாரி பயிலுநர் நியமனக் கடிதங்கள் கிடைக்காதவர்கள் உடனடியாக அறியத்தருமாறு அமைச்சரவை இணைப் பேச்சாளரும் உயர் கல்வி அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்தார்

அரச தகவல் திணைக்களத்தில் இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“பட்டதாரி பயிலுநர் நியமனத்துக்கு தெரிவானவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அனைத்தும் தபால்மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அத்துடன், நியமனக் கடிதத்தின் பிரதி அவர்களது ஈமெயிலுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஈமெயிலில் தகவல் கிடைத்தும் நியமனக் கடிதம் கிடைக்காதவர்கள் அதுதொடர்பில் பிரதேச செயலாளர்கள் ஊடாக ஜனாதிபதி செயலகத்துக்கு தகவலை அனுப்பிவைக்கவேண்டும்.

இந்த பட்டதாரி பயிலுநர் நியமனத்துக்கு விண்ணப்பித்தவர்களில் நியமனம் கிடைக்கப்பெறாதவர்களுக்கு அதற்கான காரணமும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என்றும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

இதேவேளை, பட்டதாரி பயிலுநர் நியமனக் கடிதம் கிடைத்து பிரதேச செயலகங்களில் கடந்த இரண்டு தினங்களில் கடமையைப் பொறுப்பேற்றவர்கள் மறு அறிவித்தல் கிடைக்கும் வரை அவர்களது நியமனங்கள் இடைநிறுத்தப்படுவதாக வடக்கு – கிழக்கில் பிரதேச செயலர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவால் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்குக் கிடைக்கப்பெற்ற சுற்றறிக்கைக்கு அமைய இந்த நியமனங்கள் இடைநிறுத்தப்படுவதாகவும் மேலதிகமாக அறிவிப்பு கிடைத்தால் தெரியப்படுத்தப்படும் என்றும் பட்டதாரிகளுக்கு பிரதேச செயலாளர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.