பட்டதாரி பயிலுநர் நியமனம் பற்றி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருடன் பேச்சு – அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவிப்பு

பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் இன்று பேச்சு நடத்தப்படும் என்று உயர்கல்வி அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று முற்பகல் அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பட்டதாரிகளை பயிலுநர்களாக இணைத்துக்கொள்வதை இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய சுற்றறிக்கை ஊடாக அறிவித்துள்ளமை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

” ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு அமைவாக 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இது அரசியல், இன பேதங்களுக்கு அப்பால் தகுதியான அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பை வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டமாகும். எனவே இதனை இடைநிறுத்தக்கோருவது நியாயமற்றது என்பதினாலே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருடன் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டை எட்டுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட 45 ஆயிரத்து 586 பட்டதாரிகளை பயிற்சியாளர்களாக இணைத்துக்கொள்வதற்கான கடிதங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தபாலில் சேர்க்கப்பட்டன. நியமனத்தைப் பெறும் பயற்சிப் பட்டதாரிகளுக்கு ஏப்ரல் முதலாம் திகதி அவர்களது வங்கிக் கணக்கில் 20,000 ரூபா பணம் வைப்பில் இடப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த நியமனத்துக்காக விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு அது தொடர்பான கடிதம் கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அதற்கான மேன்முறையீட்டை சமர்ப்பிக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்” என்றும் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.