வவுனியாவில் 60 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா – மாமடு, அக்ரபோதி பாடசாலையில் திடீர் சுகவீனமுற்ற 60 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இன்றைய தினம் பாடசாலைக்கு சமூகமளித்திருந்த 5 மற்றும் 8ம் தர மாணவர்களின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், இதனை அவதானித்த பாடசாலை நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரையும் உடனடியாக மாமடு பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒரு தொகுதியினர் மாமடு பிரதேச வைத்தியசாலையிலும், 26 வரையிலான மாணவர்கள் வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலைமை மோசமாக இல்லை என்றும், காலையிலும், பிற்பகலிலும் வந்த மாணவர்கள் சிகிச்சை பெற்று மருத்துவமனையை விட்டு ஒரு தொகுதியினர் வெளியேறியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா பிராந்திய மருத்துவ அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், மேலும் ஒவ்வாமைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.