கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக தரம் உயர்த்துதல் – கல்வி அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்பு

அமைச்சர்களின் படங்கள் மற்றும் செய்திகள் பாடசாலை, பாட புத்தகத்திலிருந்து நீக்கம்

தரம் 05திற்கு மேற்பட்டவர்களுக்கு கணனிக் கல்வி

முன்பள்ளி தொடக்கம் பல்கலைக்கழகம் வரையிலான கல்வி முறைமையில் மாற்றம்

குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஒன்றிணைக்க திட்டம்

19 கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக தரம் உயர்த்துதல்

கால மாற்றங்களுக்கு பொருத்தமான வகையில் முறையான கல்விக்காக தேசிய கொள்கையொன்றை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதி அல்லது கல்வி அமைச்சர் மற்றும் நடைமுறையில் உள்ள அரசு மாறும்போது மாற்றம் அடையாத நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக உருவாக்கப்படும் கல்வி முறைமையாக அமைய வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இன்று (05) நண்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“கல்விக் கொள்கை” உருவாக்கும்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி அமைச்சரவை, நாடாளுமன்றம் மற்றும் பொதுமக்கள் முழுமையாக தெளிவுபடுத்தப்படல் வேண்டும். கல்வியியலாளர்கள் மற்றும் குறித்த துறைசார் வல்லுநர்களின் ஆலோசனைகளோடு சர்வதேச முறைமைகளை கவனத்திற்கொண்டு அது உருவாக்கப்படல் வேண்டும் எனவும் தெளிவூட்டினார்.

அரசியல்வாதிகளின் செய்திகள், ஒளிப்படங்களை பாடசாலை பாடப் புத்தகத்திலிருந்து நீக்குவதற்கு கல்வி அமைச்சரினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை ஜனாதிபதி பாராட்டினார். அரசியல் மாற்றத்துடன் இந்த ஒளிப்படம் மற்றும் செய்திகளை மாற்றியமைத்து பாடப்புத்தகங்களை புதிதாக மீண்டும் அச்சிடுவதற்கு அமைச்சு பெரியளவு தொகையை செலவிட வேண்டியுள்ளது. தற்போது அப்பெரியளவு தொகையை சேமிக்க முடியும்.

“நெனச” கணனி தொழிநுட்ப வேலைத்திட்டம் கடந்த காலங்களில் பின்னடைவைக் கண்டது. அதை புதுப்பித்து வினைத்திறனான வகையில் முன்கொண்டு செல்லுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

பத்து, பதினொராம் தரங்களில் கணனி தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி சில பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அதன் உயர் பலனை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் குறைந்தது 06ஆம் தரத்திலிருந்து கணனி தொழிநுட்ப அறிவை பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படாவிடின் எமது நாட்டுக்கு உலகின் வேகமான பயணத்துடன் முன்னோக்கிச் செல்ல முடியாதென ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

கிராமிய பிரதேசங்களில் நிலவுகின்ற ஆங்கிலம், கணிதம் மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களின் பற்றாக்குறைக்கான தீர்வாக கணனி தொழிநுட்பத்தை பயன்படுத்திக்கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

முறையான திட்டமிடல்மூலம் நகரங்களில் பிள்ளைகளுக்கு கிடைக்கக்கூடிய அறிவை கிராமிய பிள்ளைகளுக்கும் இதன்மூலம் பெற்றுக்கொடுக்க முடியும். இதற்காக கிராமிய பாடசாலைகளுக்கு அவசியமான தொழிநுட்ப உபகரணங்கள், அதிவேக இணைய வசதிகளை அரச மற்றும் தனியார் தொடர்பாடல் நிறுவனங்களுடன் இணைந்து வழங்குவதற்கான வாய்ப்புக்களைப் பற்றியும் ஜனாதிபதி தனது கவனத்தை செலுத்தினார்.

முன்பள்ளி தொடக்கம் பல்கலைக்கழகம் வரையிலான பரீட்சையை அடிப்படையாகக்கொண்ட கல்வி முறையை மாற்றியமைத்து உலகை வெற்றி கொள்ளக்கூடியதும் நடைமுறைக்கேற்றதுமான பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

இம்முறை முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்கும்போது ஒரு மாணவராவது விண்ணப்பிக்காத பாடசாலைகள் கிட்டத்தட்ட நூறு அளவில் இருக்குமென கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

தமது மாகாணத்தில் 200 மாணவர்களைவிட குறைவான எண்ணிக்கையில் கல்வி கற்கும் 05, 06 பாடசாலைகள் சில பிரதேசங்களில் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் இருப்பதாக மேல் மாகாண ஆளுநர் மருத்துவர் சீத்தா அரம்பேபொல குறிப்பிட்டார். அவ்விடயம் தொடர்பாக தமது அவதானத்தை செலுத்திய ஜனாதிபதி, அவ்வாறான பாடசாலைகளை ஒன்றோடொன்று இணைப்பதற்கான வாய்ப்புக்கள் தொடர்பாக ஆராயுமாறு ஆலோசனை வழங்கினார்.

அதன்மூலம் ஆசிரியர் பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்து பாடசாலைகளின் வினைத்திறனை அதிகரிக்க முடியுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தற்போதுள்ள ஆசிரியர் கல்விக் கல்லூரிகள் 19ஐ பல்கலைக்கழக பட்டத்துடன்கூடிய ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் பல்கலைக்கழக பீடங்களாக மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

கல்வி அமைச்சு, கணனி தொழிநுட்பம் உட்பட அனைத்து துறைகளிலும் ஏற்படுத்தும் மாற்றங்களின் பிரதிபலன்களை மூன்று, நான்கு ஆண்டுகளில் தெளிவாக தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் அமைய வேண்டுமென மேலும் அவர் குறிப்பிட்டார்.