24 மணிநேரத்தில் 48பேர் – பிரித்தானியாவில் மிக வேகமாக பரவும் கொரோனா வைரஸ்

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் முதல் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருகின்றது.

தற்போது வரையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், இலக்காகியுள்ளதுடன், மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

அந்த வகையில் தற்போது சீனாவில், கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஐரோப்பா, மத்தியக்கிழக்கு மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருகின்றது.

குறிப்பாக ஐரோப்பிய நாடான இத்தாலியில் இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ள, நிலையில், பிரித்தானியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது.

தற்போது பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 163 பேர் இலக்காகியுள்ளனர். இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 48 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

20338 பேரிடம் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு இலக்கான 48 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பிரித்தானிய பிரஜைகள் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.