யாழில் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவியைத் துறந்த அம்பிகா

இலங்கை நீதிமன்றக் கட்டமைப்பில் குறைபாடுகள் உள்ளன, சிறுபான்மை மக்கள் சட்டதிட்டங்களால் ஒடுக்கப்படுகின்றனர் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன், அந்தப் பதவியிலிருந்து இன்று விலகிக்கொண்டார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெண் வேட்பாளராகக் களமிறங்குவதற்காக அவர் பதவி விலகிக்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆணையாளர் பதவியிலிருந்து விலகிய மனித உரிமைகள் சட்டத்தரணியும் பெண்ணியல்வாதியுமான அம்பிகா சற்குணநாதனுக்கு இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் பிரிவுபசார வைபவம் இடம்பெற்றது.

“இன்றிலிருந்து கொழும்புக்கு வெளியில் சென்று மக்களுக்கு சேவையாற்றப் போகின்றேன்” என்று அவர் சக பணியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

யார் இந்த அம்பிகா சற்குணநாதன்
அவுஸ்திரேலிய மொசான்ஸ் பல்கலைக்கழகத்தில் கலைமாணி மற்றும் சட்டமாணி பட்டங்களைப் பெற்றுள்ளார்.

அத்துடன், சர்வதேசத்தில் பிரசித்திபெற்ற Chevening Scholar புலமைப்பரிசிலில் இங்கிலாந்து நொட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகளில் முதுசட்டமாணிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

1998ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டுவரை கொழும்பிலுள்ள ஐ.நா. மனித உரிமைகளுக்கான தூதுவரின் அலுவலகத்தில் சட்ட ஆலோசகராகக் கடமையாற்றினார்.

2015ஆம் ஆண்டு ஒக்ரோபரில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆணையாளர்கள் மூவரில் ஒருவராக நியமிக்கப்பட்டார். அவருக்கான நியமனத்தை அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையுடன் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிவைத்தார்.

மட்டக்களப்பைத் தளமாகக் கொண்ட சூரிய பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் ஆளுநர் சபையின் உறுப்பினராகவும் அம்பிகா சற்குணநாதன் உள்ளார்.

மூத்த சட்டவாளர் நீலம் திருச்செல்வம் நிதியத்தின் தலைவராகவும் சர்வதேச பெண்ணிய அமைப்பான அவசர செயற்பாட்டு நிதியத்தின் (Urgent Action Fund) ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான உப தலைவராகவும் அவர் செயற்பட்டுள்ளார்.

பால்நிலை ஒருங்கமைப்பும் மற்றும் மதிப்பீடு என்ற விடயத்துக்கான ஐ.நாவின் வதிவிட இணைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

பால்நிலையும் முரண்பாடுகளுக்குமான ஒக்ஸ்போட் கையேடு, சமகால தென்னாசியா, நிலைமாறுகால நீதிக்கான ஆய்வுக்கான சஞ்சிகை, தென்னாசியாவில் மனித உரிமைகளுக்கான ரௌட்லெட்ஜ் கையேட்டிலும் இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

ஐ.நா. மனித உரிமைகளுக்கான தூதுவருக்கும் மனித உரிமைகளுக்கான மூத்த ஆலோசகர் அலுவலகத்துக்கும் சட்ட ஆலோசகராக அம்பிகா சற்குணநாதன் பணியாற்றியுள்ளார்.

“போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்டத்திட்டங்கள் தொடர்பாக போதிய அனுபவமிக்கவர்கள் இலங்கையின் நீதித்துறையில் இல்லை. சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவதன் ஊடாக, போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான நம்பிக்கையை மேம்படுத்த முடியும்” என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளராக நியமிக்கப்பட்ட பின்னர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்திருந்தார்.

அத்துடன், இலங்கை நீதிமன்ற விசாரணை கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக, குற்றம் இழைக்காதவர்களுக்கு கூட தூக்குத் தண்டனை அளிக்கப்படும் அபாயம் இருப்பதால் தூக்குத் தண்டனையை முற்றாக ஒழிக்கவேண்டும் என்று அம்பிகா சற்குணநாதன் கடந்த ஆண்டு கூறியிருந்தார்.