வழுக்கையாறு இந்து மயானம் சீரமைப்பு நிறைவு – செவ்வாயன்று மரநடுகை

வட்டுக்கோட்டை வழுக்கையாறு இந்து மயானத்துக்கு சுற்று மதில் அமைத்தல் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்த நிலையில் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை மரநடுகை நிகழ்வு இடம்பெற்வுள்ளது.

வட்டுக்கோட்டை வழுக்கையாறு இந்து மயான அபிவிருத்திக் சங்கத்துக்கு புதிய நிர்வாக சபை கடந்த ஒக்ரோபரில் தெரிவு செய்யப்பட்டது.

சங்கத்தின் புதிய தலைவராக வி.தபோதரனும் உப தலைவராக சிவலிங்கம் கேதீஸ்வரனும் செயலாளராக கு.நடேஸ்வரனும் உப செயலாளராக ரி.சுரேந்திரனும் பொருளாளராக ப.ஸ்ரீறிதரனும் தெரிவாகியதுடன் 14 நிர்வாக சபை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.

பல ஆண்டுகளாக எந்தவொரு சீரமைப்புப் பணிகளும் இடம்பெறாமல் காணப்பட்ட வழுக்கையாறு இந்து மயானம் புதிய நிர்வாகத்தால் அபிவிருத்தி வேலைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் சீரமைக்கப்பட்ட பின்னர் வழுக்கையாறு இந்து மயான வளாகத்தில் மரநடுகை நிகழ்வு நாளைமறுதினம் முற்பகல் 9.30 மணிக்கு நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழுக்கையாறு இந்து மயான அபிவிருத்திக் சங்கத் தலைவர் வி.தபோதரன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக வலி.மேற்கு பிரதேச சபைச் செயலாளர் திருமதி பொ.பிறேமினியும் சிறப்பு விருந்தினராக வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் ரி.நடனேந்திரனும் கலந்துகொண்டு மர நடுகையை ஆரம்பித்துவைக்க உள்ளனர்.

இதேவேளை, நாளைமறுதினம் முதல் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனத்துக்கு ஆயிரம் ரூபா கட்டணம் அறவிடப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.