மகன் இறந்துவிட்டான் என கருதி நடைபிணமாக வாழ்ந்த தாய்! 16 ஆண்டுகள் கழித்து அவருக்கு வந்த கடிதம்

தமிழகத்தில் சிறுவனாக இருந்த போது வீட்டை விட்டு ஓடிய நபர் 16 வருடங்கள் கழித்து தாயுடன் ஒன்று சேர்ந்ததோடு அவரை கட்டிப்பிடித்து கொண்டு அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா ஒக்கநாடு மேலையூர் கிராமம் கீழத் தெருவை சேர்ந்த நாகமுத்து – வளர்மதி தம்பதிகளின் மூத்த மகன் வெற்றிச்செல்வன்.

விபத்து ஒன்றில் நாகமுத்து இறந்து விட்டார் வெற்றிச்செல்வன் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டிலிருந்து காணாமல் போனார்.

அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் வெற்றிச்செல்வன் இறந்துவிட்டார் என்ற முடிவுக்கு குடும்பத்தார் வந்துவிட்டனர். இந்நிலையில் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்த வளர்மதிக்கு திடீரென ஒரு கடிதம் வந்தது.

சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் இருந்து வெற்றிச்செல்வன் தனது பெற்றோரை பார்க்க விரும்புவதாகவும் உடனே ஏற்பாடு செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்தார் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தை பார்த்த வெற்றிச்செல்வன் தாய் வளர்மதி மகன் கிடைத்துவிட்டதாக மகிழ்ச்சியடைந்தார்.

அதன் பின்னர் வெற்றிச்செல்வனின் சித்தப்பாவான பிச்சமுத்து சென்று அவரை அழைத்து வந்திருக்கிறார்.

பிச்சமுத்து கூறுகையில், ஆண்டுகள் கடந்துவிட்டதால், அவன் இறந்திருப்பான் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். வீட்டில் தலைமகன் காணாமல் போனதில் பாதி உயிருடன் தான் நடைபிணமாக அவன் அம்மா வாழ்ந்துட்டிருந்தாங்க.

திடீரென அவன் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது என கூறினார்.

வெற்றிச்செல்வன் ஊருக்கு வந்ததும் தாய் வளர்மதியை கட்டி அணைத்து கொண்டு என்னை மன்னிச்சுடும்மா என கதறி அழுதுள்ளார்.

தாயும் மகனை பார்த்த மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.

பின்னர் சகாயராணி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருவதாக வெற்றிச்செல்வன் தாயிடம் கூறினார்.