யாழில் பாடசாலைக்குள் நுழைந்த காவாலிகள்…. ஆசிரியர் மீது தாக்குதல்…வேடிக்கை பார்த்த அதிபர்!

யாழ்ப்பாணம் நீர்வேலி அச்செழு சைவப்பிரகாச வித்தியாசாலைக்குள் புகுந்த கும்பல் பாடசாலை ஆசிரியர் ஒருவரைத் தாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

அப்பாடசாலையில் பழைய மாணவர்கள் என கூறப்படுகின்ற ஐவர் அடங்கிய கும்பல் ஒன்றே இந்தச் செயலைச் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய மாணவர்கள் சிலருக்கும் பாடசாலை நிர்வாகத்துக்கும் உள்ள தனிப்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இன்று காலை பாடசாலை வளாகத்துக்குள் புகுந்த பழைய மாணவர்கள் 5 பேர், ஆசிரியரின் கையிலிருந்த பாடப்புத்தகங்களைப் பறித்து வீசி எறிந்துள்ளனர்.

அத்துடன், ஆசிரியரின் கழுத்தை நெரித்து தள்ளிவிட்ட பழைய மாணவர் ஒருவர், அவரை பாடசாலையிலிருந்து வெளியேறுமாறு மிரட்டியுள்ளார்.

இதேவேளை குறித்த ஆசிரியர் பழைய மாணவர்களால் தாக்கப்படுவதை அதிபர் வேடிக்கை பார்த்தவாறு இருந்ததாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் சம்பவம் தொடர்பில் பழைய மாணவர்களுக்கு எதிராக பாடசாலை அதிபரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்ட போதும், அதன் பின்னர் சமாதானமாகச் செல்வதாக முறைப்பாடு மீளப்பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.