கொரோனா வைரஸ் பாதிப்புகள் இந்தியாவில் இன்னும் 10 மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், இந்த விஷயத்தில், உலகளாவிய அளவில் சீனா, ஐரோப்பாவுக்கு அடுத்து கொரோனா நோய் மையமாக இந்தியா மாறக்கூடும் என்றும், மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா வளர்ச்சி இப்போது வரை மெதுவாக இருந்தபோதிலும், ஏப்ரல் 15 க்குள் “இந்த எண்ணிக்கை 10 மடங்கு அதிகமாக இருக்கும்” என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வைராலஜி மையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் டி. ஜேக்கப் ஜான் கூறியுள்ளார்.
“இது ஒரு பனிச்சரிவு என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை,” என்று போலியோ ஒழிப்பு தொடர்பான இந்திய அரசாங்க நிபுணர் ஆலோசனைக் குழுவின் தலைவரும், வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் தேசிய எச்.ஐ.வி / எய்ட்ஸ் குறிப்பு மையத்தின் தலைவருமான ஜான் மேலும் கூறியுள்ளார்.
“ஒவ்வொரு வாரமும் செல்லும்போது, பனிச்சரிவு போல இந்த நோய் தாக்கம், மிக பெரிதாக வளர்ந்து வருகிறது.” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியா vs சீனா
இந்தியாவின் முக்கிய சவால் அதன் மக்கள்தொகை அடர்த்திதான். சீனாவில் சதுர கிலோமீட்டருக்கு 148 பேர் வாழ்கிறார்கள்.
இந்தியாவில், ஒவ்வொரு சதுர கிலோமீட்டரிலும் 420 பேர் வாழ்கின்றனர். இந்தியாவின் நகரங்கள், குடிசைப் பகுதிகள், குறைந்த வருமானம் கொண்டோர் வசிக்கும் பகுதிகளில் வீடுகள் மிக மிக நெருக்கமாக அமைந்திருக்கும்.
சில இடங்களில் ஒரே கழிவறையை, நான்கு வீட்டுக்காரர்கள் பயன்படுத்தும் அளவுக்கு நமது நகர்ப்புறங்களில் ஏழை, எளிய மக்கள் வசிக்கிறார்கள். இதுதான் மோசமான நிலைமை.
ஏழைகள் நிலைமை
நோய் அறிகுறியற்ற மக்களைக் கூட தென் கொரியாவால் சோதிக்க முடிந்தது, இந்தியாவின் மக்கள் தொகைக்கு இது மிகவும் கடினமானது என்று கூறுகிறார் டாக்டர் கே. ஸ்ரீநாத் ரெட். இவர் டெல்லியை சேர்ந்த தொற்றுநோயியல் துணை பேராசிரியர்.
“சமூக விலகல் என்பது பெரும்பாலும் தற்காப்புக்காக பேசப்படும் ஒன்று, ஆனால் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்திற்கும், பணக்காரர்களுக்கும் மட்டுமே இது நன்றாக வேலை செய்கிறது. ஏழைகள் அப்படி விலகி இருக்க முடியாது,” என்று அவர் கூறியுள்ளார்.