பொலநறுவையில் ஏற்பட்ட பதற்ற நிலை

கல்ஹேல பகுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்குப்பதிவுகளின் பின்னர் வாக்கு கணக்கெடுப்பு நிலையத்திற்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

எனினும் வாக்கு கணக்கெடுப்பு ஆரம்பமானதன் பின்னர் மாலை 6 மணியளவில் கல்ஹேல பிரதேசப்பகுதியில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வாக்குக் கணக்கெடுப்பில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பாக சுயேற்சை வேட்பாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் முரண்பாட்டில் ஈடுபட்டதோடு குறித்த சுயேற்சை வேட்பாளரின் மகன் மீது சுதந்திரக்கட்சியின் ஆதரவாளர்கள் தாக்குதலை மேற்கொண்டதால் அவர் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களைக் கைது செய்யுமாறு குறித்த சுயேற்சை வேட்பாளர் பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டதனைத் தொடர்ந்து பொலிஸார் அவரை கைது செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பொலநறுவை கல்ஹேல பிரதேசத்தில் திட்டமிடப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டு வாக்குப்பெட்டிகள் கடத்தப்பட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.